New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/17/04gAFR974M10b4Y17m7d.jpg)
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் அதற்கான நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று திட்டவட்டமாக கூறினார். தேசிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என முதல்வர் ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பதில் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க உட்பட பிரதான கட்சிகள் பல இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவே கருத்து கூறியிருக்கிறார்கள்.
தி.மு.க கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தில் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ளன. அதே சமயம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, 'தமிழகத்தில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் பேரன், பேத்திகள் வரை மூன்றாவது மொழியை படித்துக் கொண்டிருக்கும் போது சாதாரண பொது மக்களின் குழந்தைகளுக்கு மும்மொழி பயிலும் வாய்ப்பு கிடைக்க கூடாதா? தி.மு.க காலாவதியான இந்த கொள்கையை வைத்து அரசியல் செய்கிறது' என குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் அளித்ததாக ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. அதில், 'நீ என்ன மொழி படிக்கிறாய்?' என மீடியா எழுப்பிய கேள்விக்கு, 'ஃப்ரெஞ்ச்' என அந்த சிறுவன் பதில் அளிக்கிறான். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 'கல்வி அமைச்சரின் மகன் மும்மொழி கொள்கை அடிப்படையில் ஃப்ரெஞ்ச் படிக்கலாம்; சாதாரண வீட்டு குழந்தைகள் படிக்கக்கூடாதா?' என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் நடக்கிறது.
அதே சமயம் கடந்த நவம்பர் மாதமே இது பற்றி அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போது அவர், 'எனது இரண்டாவது மகன் ஆறாம் வகுப்பு வரை தமிழ் தான் படித்தான். ஏழாம் வகுப்பில் யூனிக்காக ஒரு மொழி படிக்கட்டுமா? என கேட்டான். பிரெஞ்சு கஷ்டமாக இருக்கும், தமிழ் படிக்கலாம் என்றேன். அவன் ட்ரை பண்ணுகிறேன் என சொன்னதால் சரி என்றேன். ஆனால் இப்போது எட்டாம் வகுப்பில் அவன் தமிழ் தான் படிக்கிறான்' என விளக்கம் கொடுத்தார். அன்பில் மகேஷ் பேட்டி கொடுத்த அந்த வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி பகிர்ந்து அவரது மகன் ஃப்ரெஞ்ச் படிப்பதை அவர் ஒப்புக்கொண்டதாக சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.