karnataka farmer was insulted in Mahindra Showroom : நட்புக்காக படத்தில் வரும் ஒரு சீன் எல்லாருடைய மனதிலும் நன்றாக பதிந்திருக்கும். ஆட்டோவில் பணத்தை மூட்டையாக எடுத்துக் கொண்டு வருவார்கள். கார் வாங்க வரும் விஜயக்குமார், சரத்குமாரை ஆரம்பத்தில் இளக்காரமாக பார்க்கும் ஷோரூம் ஊழியர்கள், இந்த காரெல்லாம் உங்களுக்கு செட் ஆகாதுங்க… கெளம்புங்க என்று அவமானப்படுத்த, இந்த காரோட விலை என்னவோ அத மட்டும் சொல்லுங்கன்னு சொல்லி, மூட்டையில் இருக்கும் பணத்தை கொண்டு வந்து கொட்டச் சொல்வார்கள்.
அப்படி ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. அட்டைப்படத்தை பார்த்து புத்தகத்தின் மதிப்பை எடை போடாதீர்கள் என்பதை மறந்துவிட்டது போல கர்நாடகாவில் மகிந்திரா ஷோரூம். விவசாயி ஒருவர் தனக்கு வண்டி வேண்டும் என்று கேட்க உங்களால் இதனை எல்லாம் வாங்க முடியாது என்று கஸ்டமர் எக்ஸ்க்யூட்டிவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சியில், கஸ்டமர்கேர் எக்ஸ்க்யூட்டிவ் உன்னிடம் 10 ரூபாய் கூட இருக்காது. நீ எப்படி ரூ. 10 லட்சம் மதிப்பில் கார் வாங்க போகிறேன் என்று கூறியதாக விவசாயி கூறும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பணியாளர்களின் செயல்களால் அவமானப்படுத்தப்பட்ட விவசாயி இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்தோடு வந்தால் நான் கேட்கும் வண்டியை இன்றே எனக்கு டெலிவரி செய்ய வேண்டும் என்று சவால் விடுத்தார்
தான் கூறியது போலவே ரூ. 10 லட்சத்தை ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்து கொடுத்து காரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதே நாளில் மகிந்திரா ஷோரூமால் அவர் கேட்ட வாகனத்தை உடனே டெலிவரி செய்ய இயலவில்லை. உள்ளூர் பத்திரிக்கைகளால் “கெம்பேகவ்டா” என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த விவசாயியிடம் இறுதியாக ஷோரூம் பணியாளர்கள் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமின்றி கைப்பட மனிப்புக் கடிதத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
இத்தகைய செயல்பாடு நெட்டிசன்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. பலரும் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மகிந்திராவை டேக் செய்து மன்னிப்பு மட்டும் போதாது, அவர்கள் மீது நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சிலர் உங்களால் அவர் கேட்ட காரை இலவசமாக வழங்க முடியுமா என்றும் டேக் செய்துள்ளனர். எப்போதும் மக்களின் புகார்களுக்கு பதில் அளிக்கும் ஆனந்த் மகிந்திரா இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil