/indian-express-tamil/media/media_files/2025/09/26/elephant-adh-2025-09-26-18-00-00.jpg)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சோலார் மின்வேலியை உடைத்து சேதப்படுத்தி விட்டு அகழியையும் லாவகமாக தாண்டி சென்ற யானை தொடர்பான சிசிடிவி காட்சிகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், றுமுகை,லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களை சுற்றிலும் சோலார் மின் வேலி அமைத்தும், இரவு காவலுக்கு தங்கியிருந்தும் பயிர்களை காத்து வருகின்றனர்.
வச்சினம்பாளையம் பகுதியில் வசித்து வரும் குமரேசன்(60) என்பவருக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் வேடர் காலனி செல்லும் வழியில் உள்ளது. இவரது விவசாய நிலத்தில் கூலி தொழிலாளர்கள் தங்கி விவசாய வேலை செய்து வருகின்றனர். மேலும்,தனது நிலத்தில் வாழை,தென்னை,பாக்கு மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது விளைநிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதம் செய்துள்ளது.
தொடர்ந்து வன எல்லையை ஒட்டியுள்ள இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலியை தந்தங்களால் உடைத்து சேதப்படுத்தியதோடு, அதனை ஒட்டியிருந்த அகழியையும் லாவகமாக தாண்டிச்சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் வன எல்லையை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சமீபகாலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து பயிர்கள் சேதம் செய்யப்படுவதோடு,இரவு காவலுக்கு கூட தொழிலாளர்கள் வருவதற்கு அச்சமடைந்து உள்ளனர்.
வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகழிகளும் போதுமான ஆழத்திலும், அகலத்திலும் இல்லாததால் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த அகழிகளை கால்களால் மண்ணை தள்ளி அகழியை மேடாக்கி விட்டு அதில் லாவகமாக தாண்டி வந்து விடுகின்றன. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அதனை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகிறோம். வனத்துறையினர் வன எல்லைகளை சுற்றிலும் அமைத்துள்ள அகழிகளை போதுமான அகலத்திலும்,ஆழமாகவும் வெட்ட வேண்டும்.இரவு நேரங்களில் ரோந்துப்பணியை வனத்துறையினர் துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.