கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. மலையின் அடிவார பகுதியில் அமைந்து உள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலில் பக்தர்கள் தினமும் வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இதனால் அந்தக் கோவில் வளாகத்தை சுற்றி பூஜை கடைகள், பொம்மை கடைகள் வியாபாரம் நடந்து வருகிறது. தேங்காய், பழம் உட்பட பூஜை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலுக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கு இருந்த பூஜை கடைக்குள் புகுந்து பூஜை கடைகள், பொம்மை கடைகளை சூறையாடியது. இதனால் அங்கு இருந்த வியாபாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதேபோன்று நேற்று அங்கு அடிவாரத்தில் உள்ள கோவில் வளாகத்தில் திடீரென்று ஒற்றைக் காட்டு யானை வந்துள்ளது.
யானையை கண்ட பக்தர்கள் அலறினர். அங்கு இருந்த ஒருவர், *உள்ளே போ, உள்ளே போ பாவம் குழந்தை, குட்டிகளுடன் இருக்கிறார்கள் என்று கூறுவதைக் கேட்டு தனக்கு உணவு அளிக்க அழைப்பதாக எண்ணி கொண்டு அவர்களை நோக்கி வருகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், யானை அங்கே சுற்றி திரிந்ததால் பட்டாசு வெடித்தனர். அந்த சத்தத்தை கேட்டு கோபம் அடைந்தால் யானை, ஆக்ரோஷமாக பட்டாசு வெடித்து இடத்திற்கு ஓடி வருகிறது.
அங்கு இருந்தவர்கள் கூச்சலிட்டதால் நீண்ட நேரத்திற்குப் பிறகு அங்கு இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை வெள்ளிங்கிரி வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “