/indian-express-tamil/media/media_files/2025/09/17/elephantss-2025-09-17-09-31-59.jpg)
கோவை தொண்டாமுத்தூர் அருகே அட்டகாசம் செய்து வரும் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் கோட்டை விட்ட வனத்துறையினரால் விவசாயிகள் அதிப்தி அடைந்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் ரோலக்ஸ் காட்டு யானை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 50 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கெம்பனூர் அருகே காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஆயத்தமான நிலையில், வனப்பகுதிக்குள் புகுந்து மாயமானது. இதையடுத்து ட்ரோன் கேமரா மூலம் ரோலக்ஸ் யானை எங்கு உள்ளது என்பது கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இரவு வனப் பகுதி விட்டு வெளியே வந்த காட்டு யானை ரோலக்ஸ் கெம்பனூர் பகுதி கதிரவன் என்பவரின் தோட்டத்தில் முகாமிட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத்துறையினர் காட்டு யானையை சுற்றி வளைத்து கால்நடை மருத்துவ குழு இணைந்து காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தனர். அப்போது இரண்டு ஊசிகளில் ஒரு ஊசி மட்டுமே யானை மீது செலுத்தப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் சுதாகரித்துக் கொண்ட காட்டு யானை அங்கிருந்து வேகமாக அருகே உள்ள யானை மடுவு வனப்பகுதிக்ஙகுள் சென்று கூட்டத்துடன் சேர்ந்தது. அதனால் ரோலக்ஸ் காட்டு யானையை பிடிப்பதில் வனத்துறையினர் மீண்டும் கோட்டை விட்டனர். இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் நள்ளிரவு ஒரு மணிக்கு வனத்துறையினர் முகாமிட்டிருக்கும் அலுவலகத்தை முற்றுகை முடிவு செய்து அப்பகுதிக்கு வரத் தொடங்கினர். இதனை அறிந்த பேரூர் சரக துணை ஆணையர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அவர்களை அப்பகுதியில் இருந்து அனுப்பி வைத்தார்.
அதேபோல வனத்துறையினர் தங்கி உள்ள இடத்திற்கு சென்று காட்டு யானை பிடிப்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் குழு அமைத்து தாமதம் இன்றி உடனடியாக ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார். காட்டு யானையை பிடிப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு எந்த பயனும் இன்றி காட்சி பொருளாகவே இருப்பதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
அதேபோல காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழு கோட்டை விட்டதால் மேலும் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு காட்டு யானை பிடிப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விவசாய்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.