கோவை சிட்கோ பகுதியில் தொழிற்சாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் அமில(ஆசிட்) சேமிப்பு கிடங்கு உடைந்து அமில(ஆசிட்) குழம்பு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை சிட்கோ பகுதியில் சக்தி சுந்தர் ஆசிட்ஸ் (பி)லிட்., என்ற தொழிற்சாலைகளுக்கான அமிலம் மற்றும் கெமிக்கல் மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் அமிலம் (ஆசிட்) மற்றும் வேதிப்பொருட்கள் (கெமிக்கல்ஸ்) இருப்பு வைத்து தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவு அமிலம் இருப்பு வைப்பதால் அதன் தாக்கம் காரணமாக அருகில் உள்ள தொழிற்சாலைகளின் இரும்பு தகட்டால் ஆன மேற்கூரைகள் எளிதில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து விடுகிறது. இது குறித்து அருகில் உள்ள நிறுவனங்கள் அவ்வப்போது புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (செப் -6) அதிகாலை 3 மணியளவில் இந்த தொழிற்சாலையின் மேல் தளத்தில் இருந்த இரும்பு தகட்டால் ஆன மேற்கூரை திடீர் என்று பெயர்ந்து விழுந்தது. இதன் காரணமாக கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அமிலங்களை சேமித்து வைக்கும் கிடங்கு உடைந்து அமிலம் எரிமலை நீர் குழம்பு போல வெளியேற துவங்கியது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமில(ஆசிட்) குழம்பு சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சாலைகளிலும் அருகில் தாழ்வாக உள்ள தொழிற்சாலைகளின் உள்ளேயும் பெருககெடுத்து ஓடியது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாநகராட்சி, இன்ஸ்பெக்டர் ஆப் பாக்டரீஸ், மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுக்கு அருகில் உள்ள தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல் அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி சென்றனர். அதிக அளவில் அமிலம் வெளியேறியதால் சுற்றுப்புறத்தில் உள்ள நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தொழிற்சாலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யாமல் இந்த நிறுவனம் செயல்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கோவை சிட்கோ சுற்றுவட்டார பகுதியில் இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“