சிகரம் தொட்ட மனிதர்கள் என்ற சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நேர்காணல் நடத்திய அனுபவங்களை விஜய் டிவி நீயா நானா நெறியாளர் கோபிநாத் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கோபிநாத் நடத்திய உரையாடல் வீடியோ வைரலான நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி உடனான பழைய நினைவுகளை குறிப்பிடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: அரசியலுக்கு முன்னும் பின்னும், விமர்சனங்களுக்கு தயங்காத குஷ்பு சுந்தர்
வீடியோவில், அந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு தரப்பட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், மனிதர்களை பேட்டி கண்டேன். இது எனக்கு நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுத்தது. அதில் குறிப்பாக கருணாநிதியுடனான சந்திப்பு மறக்க முடியாதது. அந்த பேட்டிக்காக கிட்டத்தட்ட 3 மாதம் கடுமையாக முயற்சி செய்தேன். தினமும் அவர் கண்முன் படும்படியாக நிற்பேன். ஒருகட்டத்தில் பேட்டி தர கருணாநிதி முன்வந்தப்போது, அதை வழக்கமான பாணியில் இல்லாமல், நடந்துக் கொண்டே உரையாடும் விதமாக வடிவமைத்தேன். அதற்கு முன் யாரும் அவரிடம் இப்படி பேட்டி கண்டதில்லை. நான் இதற்காக அவர் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரத்தை தேர்ந்தெடுத்து, அனுமதி கோரினேன்.
அனுமதி கிடைத்த நிலையில், என்னுடைய எதிர்ப்பார்ப்பு, நாம் வழக்கமாக பார்க்கும் உடையில் இல்லாமல், காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் இயல்பான உடையில் கருணாநிதி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரும் அப்படியே வந்தார். அந்த பேட்டி காலையில் விடிந்தும் விடியாத நிலையிலும் எடுக்கப்பட்டது. அந்த அற்புதமான பேட்டியின் வீடியோ தொகுப்பில் இருந்து குறிப்பிட்ட சில பகுதிகளை இந்த யூடியூப் பக்கத்தில் பகிர்கிறேன். இதுபோன்று பெரிய தலைவர்களிடன் நான் பார்த்த பொதுவான விஷயம், நகைச்சுவை உணர்வு மற்றும் அந்த சூழலை எளிதாகக் கையாளும் பாங்கு, எந்தக் கேள்வியையும் எதிர்கொள்வதற்கான துணிச்சல், என்று கோபிநாத் கூறியுள்ளார்.
தொடர்ந்து கருணாநிதியுடனான பழைய வீடியோ கிளிப்பை இதில் இணைத்துள்ளார். அந்த பழைய வீடியோவில், கருணாநிதியின் சிறப்புகளை பட்டியலிட்டு அவரை அறிமுகப்படுத்துகிறார். பின்னர் கோபிநாத் தோளில் கைப்போட்டு நடைபயிற்சி செய்தவாறே கருணாநிதி கேள்விகளை எதிர்கொள்கிறார்.
சிகரத்தை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைக்க அடிப்படையாக அமைந்தது எது? என்ற கேள்விக்கு, ”சுயமரியாதை உணர்வு தான்”, என்றும், உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை என்று நீங்கள் கருதுவது? என்ற கேள்விக்கு, ”தந்தைப் பெரியாரைச் சந்தித்தது, தொடர்ந்து அறிஞர் அண்ணாவை சந்தித்தது தான்” என்றும் கலைஞர் கருணாநிதி கூறினார்.
இலக்கியம், அரசியல் இரண்டையும் எவ்வளவோ நேரப் பிரச்சனைகள் இருந்தாலும் விட்டுவிடவில்லை. அரசியலுக்கு இலக்கியம் பாலமாக அமைந்ததா? அல்லது இலக்கியத்திற்கு அரசியல் பாலமாக அமைந்ததா? என்ற கேள்விக்கு, ”என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், நான் பாலத்தில் நடக்கின்றப்போது, இருபுறமும் இருக்கும் கைப்பிடிகள் போல, ஒரு பக்கத்தில் இலக்கியமும், இன்னொரு பக்கத்தில் அரசியலும் இருக்கிறது” என்றும், உங்கள் முதல் பொதுவாழ்வு பிரவேசம் இலக்கியம் தொடர்பானது தானே? என்ற கேள்விக்கு, ”இல்லை. சமுதாய பணிகள் தான் முதல் பொது வாழ்வு பிரவேசம்,” என்றும் கலைஞர் கூறினார்.
83 வயதிலும் எப்படி, மாநில அரசியல் முதல் தேசிய அரசியல் வரை கவனிக்கிறீர்கள். புத்தகம் படிக்கிறீர்கள், முரசொலிக்கு எழுதுகிறீர்கள். நடைபயிற்சி மேற்கொள்கிறீர்கள். திரைத்துறையிலும் வசனம் எழுதுகிறீர்கள். உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 60-70 மணி நேரம் இருக்கிறதா? என்ற கேள்வி சிரித்தவாறே, ”இருக்கிற நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறேன். ஒய்வை எப்போது விரும்புவதில்லை. எப்போதும் உழைக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். உழைப்பு தான் கருணாநிதியின் முன்னேற்றத்திற்கு காரணம். இதை அண்ணாவே எனது பிறந்தநாள் விழாவில் குறிப்பிட்டு இருக்கிறார்,” என்று கருணாநிதி கூறினார்.
எல்லோருக்கும் பொருந்தக் கூடிய வாழ்க்கை தத்துவம் எது? என்ற கேள்விக்கு, ”வாழ்க்கை வாழ்வதற்கே என்பது பொன்மொழி, ஆனால் வாழ்வதற்காகவே வாழ்க்கை இருக்கக் கூடாது. வாழு, வாழ விட என்ற நிலையிலே அமைய வேண்டும்” என்று கருணாநிதி கூறினார்.
தமிழ் சமுதாயம் இன்னும் சிகரத்தைத் தொட என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு, ”முதலில் ஒற்றுமை வேண்டும், இன உணர்வு வேண்டும், மொழிப்பற்று வேண்டும். இவையெல்லாம் இருந்தால் தமிழ் சமுதாயம் நிச்சயம் சிகரத்தை தொட்டு விடும்” என்று கருணாநிதி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.