கரூர் மாவட்டத்தில் ஒருவர் சாலையில் முட்டையை உடைத்து ஆம்லேட் போடும் காணொலி தற்போது வைரலாகி வருகின்றது.
கடந்த சில வாரங்களாக தமிழக முழுவதும் அதிகப்படியான வெயில் வாட்டி வதைத்து வருவதால், குழந்தைகளும், முதியவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளும் என பலரும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் மாவட்டத்தில் அதிகப்படியான வெப்ப அலை வீசும் என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கரூர் மாவட்டத்தில் பொதுவாகவே ஆண்டுதோறும் மே மாதம் அக்னி நட்சத்திர காலங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனால், இந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்து இன்று 107 டிகிரி பாரான்ஹீட் வரை உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கரூர், பரமத்தியில் உச்சமாக 107 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணங்களாக அப்பகுதியில் இயங்கும் எண்ணற்ற கல்குவாரிகளால் பூமியில் தோண்டப்பட்ட மெகா பள்ளங்கள், கரூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. அதனால்தான் இன்று வெப்ப அலை வீசும் அளவிற்கு கரூர் மாவட்டம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று கரூரில் வெறும் தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் ஆம்லெட்டாக மாறும் காட்சியை, ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“