தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஸ்டைலில், ஆந்திரா எம்.பி. நரமள்ளி சிவபிரசாத் நாடாளுமன்ற வளாகத்தில் சாட்டையை சுழற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
Advertisment
கடந்த சில மாதங்களாக ரஃபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ்,அதிமுக மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுத்தது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமள்ளி சிவபிராசாத் கடந்த கால கூட்டத்தொடர்களில் நாள்தோறும் வித்தியாசமான தோற்றத்தில் வந்து மாநிலத்தின் கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.அனுமன், என்டிஆர், சிவன், பார்வதி, பிச்சைக்காரர், ஹிட்லர் என அவர் வேடமிட்டு வந்த லிஸ்டுகள் ஏராளம். சமீபத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை போலவும் வேடமிட்டு வந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது டெல்லியில் நடைப்பெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இன்று காலை எம்.பி. நரமள்ளி சிவபிரசாத் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் களம் இறங்கி இருந்தார். நாடாளுமன்ற வளாகத்தின் முன் தெலங்குதேசம் எம்.பி.களோடு சேர்ந்து அவர் தங்கள் மாநிலத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.
எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்தவாறு நரமள்ளி சிவபிரசாத் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
கூடவே, "நான் ஆணையிட்டால்" பாடலை ஒலிக்க விட்டு கையில் வைத்திருந்த சாட்டையை சுழற்றினார். பாடலுக்கு ஏற்ப அவர் ஆக்ஷன் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.