துபாய் நாட்டில் துப்புரவு பணியில் உள்ள இந்தியர், தனது மனைவிக்காக மரத்திலிருந்து விழுந்த காய்ந்த இலை மற்றும் தழைகளைக்கொண்டு இதயம் போன்று வடிவமைத்த போட்டோ, சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் ரங்கராஜன் காந்தி. இவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் துப்புரவுத்தொழிலாளியாக உள்ளார். அவர் துபாயில் வேலை பார்த்து வந்தாலும், அவரது நினைவு முழுவதும் குடும்பத்தை சுற்றியே இருந்தது. ஒருநாள், நிறுவன வளாகத்தில் குழுமியிருந்த இலை, தழைகளை அகற்ற முற்பட்டபோது என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென அந்த இலை தழைகளை வைத்து இதயம் போன்று வடிவமைத்தார்.
இதை அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த நேஸ்மா பராஹத், அதை அப்படியே போட்டோ எடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அந்த போட்டோவை, நேஸ்மா, இன்ஸ்டாகிராமில், ‘thehappyboxofficial’ என்ற ஹேண்டில் உருவாக்கி அதில் “The best thing we’ve seen all year #2020 பதிவிட்டார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
என் மனைவியின் நினைவால், நான் இதயத்தை வரைந்துள்ளேன். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன், அதேபோல் அவளும் என்மேல் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். நான் எப்போதும் அவளுடைய நினைப்பாகவே உள்ளதாக காந்தி கூறியதாக கல்ப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தந்தைக்கு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இந்தியா வர ரமேஷ் ரங்கராஜன் காந்தி திட்டமிருந்தார். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரது இந்திய பயணம் கடைசிநேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil