New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/24/7FW1IlJ2kDPL4hYpiZ0p.jpg)
பிரசாந்த் விரைவில் பணியில் சேர்ந்தார், ஆனால் நேர்காணலில் பேசியவரின் குரலுக்கும் தற்போது பேசுபவரின் குரலுக்கும் வித்தியாசம் இருந்ததால் ஊழியர்களுக்கு விரைவில் சந்தேகம் ஏற்பட்டது. (Representative image/Pinterest)
தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ராபா சாய் பிரசாந்த் என்பவர், இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்காக நடந்த மெய்நிகர் நேர்காணலில் தன்னைப் போல வேறொருவரை ஆள்மாறாட்டம் செய்ய வைத்து மோசடி செய்துள்ளார்.
Advertisment
‘டிராகன்’ தமிழ் திரைப்படத்தில் வருவது போல ஒரு வினோதமான திருப்பமாக, தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு இளம் மென்பொருள் பொறியாளர் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பெறுவதற்காக ஆள்மாறாட்டம் மோசடி செய்தார். ஆனால், பணியில் சேர்ந்த 15 நாட்களுக்குள்ளேயே அவர் அம்பலமானார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, 20 வயதான ராபா சாய் பிரசாந்த் என்பவர், இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு பதவிக்காக நடந்த மெய்நிகர் நேர்காணலின்போது தனக்குப் பதிலாக வேறொருவரை ஆள்மாறாட்டம் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் விண்ணப்பித்த பிறகு, பிரசாந்தின் ஆவணங்கள் சம்பிரதா சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் மேலாளர் சிவ பிரகாஷ் என்பவரால் சரிபார்க்கப்பட்டு இன்போசிஸுக்கு அனுப்பப்பட்டன.
நேர்காணலைத் தொடர்ந்து, இன்போசிஸ் அவருக்கு ஜனவரி 20, 2025-ல் பணி நியமன ஆணையை வழங்கியது. பிரசாந்த் விரைவில் பணியில் சேர்ந்தார். ஆனால், நேர்காணலில் பேசியவரின் குரலுக்கும் தற்போது பேசுபவரின் குரலுக்கும் வித்தியாசம் இருந்ததால் ஊழியர்களுக்கு விரைவில் சந்தேகம் ஏற்பட்டது. சிறந்த கல்விப் பின்னணி இருந்தும், அவரால் அடிப்படை விஷயங்களைக் கூட சரியாகப் பேச முடியவில்லை. நேர்காணலின்போது பிரசாந்த் சரளமாக ஆங்கிலம் பேசியதாக அந்த அறிக்கை வலியுறுத்தியது.
Advertisment
Advertisements
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், இந்த முரண்பாடு உள் விசாரணைக்கு வழிவகுத்ததாகத் தெரிவித்தார். மனிதவளத் துறையினர் மெய்நிகர் நேர்காணலின் ஸ்கிரீன்ஷாட்களை பிரசாந்தின் தற்போதைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவருக்குப் பதிலாக வேறு யாரோ கலந்துகொண்டது தெளிவாகத் தெரிந்தது.
பிரசாந்த் பணிநீக்கம் செய்யப்பட்டு ஹைதராபாத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். மோசடி செய்த போதிலும், அவர் பணியாற்றிய 15 நாட்களுக்கான இழப்பீட்டைக் கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 419 (ஏமாற்றுதல்) மற்றும் 420 (ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் இதேபோன்ற சம்பவங்களில், 2017 ஆம் ஆண்டில் குருகிராமில் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் நியமனத் தேர்வில் ஒரு தேர்வுக்குப் பதிலாக ஆஜரான இருவர் கைது செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு, 2016-ல் உத்தரகாண்ட் ஆயுர்வேத முன் மருத்துவத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 12 பேர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 2012-ல், குற்றப்பிரிவு எய்ம்ஸ் முதுகலை நுழைவுத் தேர்வுகளின்போது அதிநவீன மோசடி கும்பல் ஒன்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது, அங்கு மேம்பட்ட மொபைல் போன்களைப் பயன்படுத்தி கேள்வித்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, ப்ளூடூத் சாதனங்கள் மூலம் பதில்கள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.