தமிழகத்தில் ஜவுளிக் கடை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு சேலை கட்டிய பெண் ரோபோ ஒன்று ஹாண்ட் சானிடைசரை விநியோகிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலால் அத்தியாவசிய தேவையில்லாத அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெரிய ஜவுளிக் கடைகள் நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொரோன வைரஸ் பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக் கவசம் அணிதல், ஹாண்ட் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை கட்டயமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
அதன்படி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஹாண்ட் சானிடைஸர் கொடுத்து கைகளை சுத்தம் செய்ய வைக்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தில், ஒரு பெரிய ஜவுளிக்கடையில் சேலை கட்டிய பெண் ரோபோ ஒன்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தானாக நகர்ந்து சென்று ஹாண்ட் சனிடைஸர் விநியோகிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை ஜவுளிக்கடைகளில் அழகான பொம்மைகள் அழகான ஆடை அணிந்து ஆடைகளின் விளம்பரத்துக்கு பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். ஆனால், தமிழகத்தில் ஒரு பெரிய ஜவுளிக்கடையில் சேலை கட்டிய அழகான பெண் ரோபோ, கடைக்குள் தானாக நகர்ந்து வாடிக்கையாளர்களை நோக்கி சென்று நிற்கிறது. அதன் கைகளில் இருக்கும் ஹாண்ட் சானிடைஸர் பாட்டில் முன்பு வாடிக்கையாளர்கள் கைகளை நீட்டினால் சானிடைஸர் திரவம் வருகிறது. ஜவுளிக்கடையின் இந்த தொழில் நுட்ப யுக்தி அந்த கடையில் வாடிகையாளர்களை ஈர்த்துள்ளது.
தமிழக ஜவுளிக்கடை ஒன்றில் சேலை கட்டிய பெண் ரோபோ வாடிக்கையாளர்களுக்கு ஹாண்ட் சானிடைஸர் விநியோகிக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமென் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து சுதா ராமென் ட்விட்டரில் குறிப்பிடுகையில், “தமிழ்நாட்டில் ஒரு ஜவுளிக்கடை ஷோரூமில் ஒருவர் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளார். மனிதர்களைப் போல சேலை கட்டிய ரோபோ மனிதர்களை தேடி நடந்து சென்று ஹாண்ட் சானிடைஸர் வழங்குகிறது. கொரோனாவுக்கு பிறகு தீவிரமான தொழில்நுட்ப பரிணாமங்கள் காணப்படுவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"