டிசம்பர் என்றாலே கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டம் என வீடுகளில் களைகட்டும். குழந்தைகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், கிறிஸ்மஸ் தாத்தா நமக்கு பிடித்தமான பரிசு பொருட்களை வாங்கி தருவார் என சந்தோஷம் அடைந்திருப்பார்கள்.
ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளியொன்றில் 7 வயது சிறுவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதிய இரண்டு வரி கடிதம் நெட்டிசன்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
“எனக்கு ஒரு பந்து, உணவு, போர்வை வேண்டும்”, என அந்த 7 வயது சிறுவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளான். அதனை, அவனது வகுப்பு ஆசிரியர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதனுடன், “இது என்னை மிகவும் வருத்தமடைய செய்திருக்கிறது. பொம்மைகளுக்கு பதிலாக உங்கள் மாணவர்கள் உணவையும், போர்வையும் கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. இது என்னுடைய இதயத்தை நொறுங்க செய்வதாக உள்ளது. நமக்கு சாதாரணமாக கிடைப்பவற்றை அவர்கள் வலிந்து கேட்கிறார்கள். அவர்களின் கிறிஸ்மஸ் ஆசைகளை நான் நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்”, என அந்த ஆசிரியர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் அச்சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
அச்சிறுவனுக்கு உதவ முன்வந்த அத்தனை பேருக்கும் அந்த ஆசிரியர் நன்றி தெரிவித்துள்ளார்.