இன்றைய சமூக ஊடகங்களின் நாள்தோறும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் வன விலங்குகளைப் பற்றிய வீடியோக்கள். மனிதர்களுக்கு, வனத்தின் மீது ஒரு பெரிய ஆர்வம் இருக்கிறது. அதனாலேயே, வனவிலங்குகள் வீடியோக்களை ஆர்வமாகப் பார்க்கிறார்கள்.
மனிதர்கள்- வனவிலங்குகள் மோதல் என்பது மனிதன் உருவாக்கியது. ஆனால், காடுகளில் வனவிலங்குகளுக்கு இடையே நடைபெறும் மோதல் என்பது இயற்கையானது. வனவிலங்குகளைப் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக, ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் வனத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன. இந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் ஆர்வமாகப் பார்த்து கம்மெண்ட் செய்கின்றனர்.
அந்த வகையில், ஐ.எஃப்.அதிகாரி சுரேந்திர மெஹ்ரா தனது எக்ஸ் பக்கத்தில், இயற்கையில் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ள, 3 சிறுத்தைகளுக்கும் ஒரு வளைகரடிக்கும் இடையே சண்டை நடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ஆப்பிரிக்க வனப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், வேகத்திற்கும் வேட்டைக்கும் பேர்போன, 3 சிறுத்தைகள், ஒரு வளைகரடியை சுற்றி வளைத்து தாக்க முயற்சி செய்கின்றன. ஆனால், அந்த வளைகரடி தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சீற்றத்துடன் சிறுத்தைகளையே பின்வாங்க வைக்கிறது. வளைகரடி சீறும் சீற்றத்தையும் அதன் தாக்குதலையும் பார்த்த 3 சிறுத்தைகளும் ஒரு கட்டத்தில் அந்த வளைகரடியை வேட்டையாட முடியாமல் அதன்போக்கில் செல்ல அனுமதிக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
உண்மையில், 3 சிறுத்தைகளுக்கும் 1 வளைகரடிக்குமான இந்த சண்டை உயிர்வாழ்தலுக்கான சண்டைதான், ஆனால், பார்க்கவே ஆக்ரோஷமாகவும் சிலிர்க்கவும் வைக்கிறது. இந்த வளைகரடி 3 சிறுத்தைகளையும் தெறிக்கவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“