viral video: இப்போதெல்லாம் வனவிலங்குகள் ஊருக்குள் நடமாட்டம் என்ற செய்தி வாடிக்கையான ஒன்றாகி விட்டது. திறந்த வெளியில் ஒரு புலி மாடுகளை குறி வைத்து வேட்டையாட விரட்டுகிறது. எல்லா மாடுகளும் தப்பிவிட ஒரு கன்றை பிடித்துவிடுகிறது. இதைப் பார்த்த தாய்ப்பசு பாய்ந்து வந்து இடிக்க புலி புறமுதுகிட்டு ஓடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட புலிகள் பாதுகாப்பு முயற்சிகள் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. டைகர் புராஜெக்ட் 50வது ஆண்டில், இந்தியாவில் இப்போது 3,000க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. இதற்கிடையில், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மனிதர்கள்-விலங்குகள் மோதல் சம்பவங்கள் கவலைக்குரிய விஷயமாக தொடர்கிறது.
தற்போது, புலி ஒன்று மனிதர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு புலி மாடுகளை துரத்துவதைக் காட்டுகிறது. வரிப்புலி திறந்தவெளியில் மாடுகளை விரட்டுகிறது. எல்லா மாடுகளும் அதனிடம் இருந்து தப்பிவிட, இறுதியில் கன்று மாட்டிக் கொள்கிறது. புலி கன்றின் மீது பாய்ந்து தாக்கியதும் கன்று கீழே விழுகிறது. அப்போது, கன்றின் அபயக் குரலைக் கேட்டு எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் தாய்ப்பசு பாய்ந்து வந்து புலியை விரட்டுகிறது. தாய்ப்பசுவின் பாய்ச்சலைக் கண்டு புலி புறமுதுகிட்டு ஓடுகிறது. தாய்ப்பசுவின் பாசத்தால் காட்டிய வீரத்தால் கன்று உயிர் தப்பியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
“இப்போது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75% புலிகள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் சுமார் 3200 புலிகள் இருக்கின்றன.” என்று சுசந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 1.32 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களிடமிருந்து பல்வேறு கருத்துகளைப் பெற்றுள்ளது. ஒரு பயனர் “காலம் என்ற புனைப்பெயரில் பாதுகாக்கப்பட்டது. ஆனால், புலி பசியுடன் சென்றுவிட்டது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “இதுபோல புலி வேட்டையாடுவதைப் பார்த்ததில்லை..” என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பயனர், “புலிகளின் எண்ணிக்கையைப் பார்ப்பது கண்களுக்கு விருந்தாகும். ஆனால், அதே நேரத்தில் மனிதர்கள் – விலங்குகள் மோதலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மற்றும் பரந்த விழிப்புணர்வு செயல்படுத்தப்பட வேண்டும். வனவிலங்குகள் (ஃப்ளோரா, விலங்கினங்கள்) மீது பொதுமக்களிடையே குறிப்பாக வேட்டையாடும் விலங்குகளின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் பங்கு” குறித்து விழிப்புணர்வு ஏறபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் புலிகள் கணக்கெடுப்பின் 5வது சுழற்சியின் தரவுகளின்படி, நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2,967-ல் இருந்து 2022-ல் 3,167 ஆக 6.74 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் திட்டம் ஏப்ரல் 1, 1973 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. சுதந்திரத்தின் போது புலிகளின் எண்ணிக்கை 40,000 ஆக இருந்தது, ஆனால் 1970 வாக்கில், பரவலான வேட்டையாடுதல் காரணமாக அது வேகமாக 2,000 ஆக குறைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“