Viral Video: வாகனங்கள் அதிகம் போக்குவரத்து உள்ள ஒரு காட்டு வழியே செல்லும் சாலையை ஒரு புலி மிகவும் எச்சரிக்கையாகக் கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வனவிலங்குகளின் வாழ்க்கையைப் பறித்தது எப்படி வளர்ச்சியாகும் என்று ஐ.எஃப்.எஸ் அதிகாரி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் காடுகளின் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஒரு காடுகள் அழிப்பு மனிதர்களின் ஆக்கிரமிப்பால் நடகிறது என்றால், இன்னொரு பக்கம் வளர்ச்சி திட்டங்களின் பெயரால் நடக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது வனவிலங்குகள்தான். காடுகளின் பரப்பு குறைவதாலும், காட்டு வழியே வாகனப் போக்குவரத்துக்கான பெரிய சாலைகள் அமைப்பதாலும் வனவிலங்குகள் தொந்தரவுக்குள்ளாகின்றன.
இதனால், வனவிலங்குகள் - மனிதர்கள் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் இடமான காடுகளை ஆக்கிரமித்துக்கொண்டு பிறகு, யானைகள் அட்டகாசம் செய்தது, சிறுத்தை, புலி தாக்கிய து என்று கூறுவது எப்படி நியாயம் என்று சூழலியலாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி கேள்வி கேட்கும் விதமாக ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, வாகனங்கள் செல்லும் ஒரு காட்டு வழிச் சாலையில் புலி ஒன்று எச்சரிக்கையாக சாலையைக் கடக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். காட்டு வழிச் சாலையில், நமது வனவிலங்குகளின் வாழ்க்கையை இந்த வளர்ச்சி எப்படி எடுத்துக்கொண்டிருக்கிறது பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நிச்சயமாக இது இதயத்தை நொறுக்கும் காட்சிதான் என்று தங்கள் வருத்தத்தை தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர். இதனால், புலி எச்சரிக்கையாக சாலையைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"