viralvideo: ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தில் பகீரா மோக்ளிக்கு யானைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று மண்டியிட்டு கற்றுக் கொடுக்கும். அதே போல, நிஜத்தில் ஒரு புலி யானைகளுக்கு மரியாதை அளித்து மண்டியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அவற்றில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் கனிசமானவை. காடுகளையும் காட்டு விலங்குகளையும் புரிந்துகொள்வதே இயற்கையைப் புரிந்துகொள்வது.
அமெரிக்க இயக்குனர் ஜான் பெவ்ரா இயக்கிய ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தில், கருஞ்சிறுத்தை பகீரா காட்டில் ஓநாய்களின் அரவணைப்பில் வளரும் மோக்ளிக்கு யானைகளுக்கு மரியாத அளிக்க வேண்டும் என்பதைக் கூறி மண்டியிடக் கற்றுக்கொடுக்கும். யானைகள்தான் இந்த காட்டை உருவாக்கினார்கள் என்று பகீரா கூறும் இடம்பெற்றிருக்கும்.
நிஜத்திலும் அதே போல, ஒரு புலி யானைகளுக்கு மரியாதை அளிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. மழை பெய்துகொண்டிருக்கும்போது, வண்டி பாட்டையில் ஒரு ஒற்றைப் புலி செல்கிறது. திடீரென யானைகள் புதரில் இருந்து அந்த வண்டி பாட்டை மண் சாலையைக் கடக்கின்றன. இதை அறிந்த புலி உடனடியாக ஒரு ஓரத்தில் மண்டியிட்டு மரியாதை காட்டுகிறது. யானைகளும் புலியை எதுவும் செய்யாமல் சென்று விடுகின்றன. யானைகள் போய்விட்டது என்று புலி மீண்டும் செல்கிறது. ஆனால், இன்னொரு யானை வருவதை அறிந்த புலி வேகமாக சென்று மறைந்துகொள்கிறது. அந்த யானையும் கடந்து செல்கிறது.
இந்த காட்சி வனவிலங்குகளுக்கு இடையே நிலவும் ஒத்திசைவு, வனவிலங்குகளுக்கு இடையேயான இயற்கையின் விதிகளைக் கடைபிடிப்பதை உணர்த்துகிறது.
இந்த வீடியோவை விஜிதா சிம்ஹா பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, “இப்படித்தான் விலங்குகள் தொடர்புகொண்டு நல்லிணக்கத்தைப் பேணுகின்றன… புலியின் இருப்பை மோப்பம் பிடித்த யானை பிளிறுகிறது. புலி யானைக் கூட்டத்துக்கு வழி விடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ இதுவரை 1.67 லட்சத்துக்கு மேலான பார்வைகளை பெற்றுள்ளது. புலி யானைகளுக்கு மரியாதை அளித்து மண்டியிடுவதை வீடியோவில் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“