திருப்பதி திருமலையில் மரத்தில் சுற்றிக்கொண்டிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் கிரேன் உதவியுடன் பிடித்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்கள் விருந்தினர் மாளிகை அருகே சனிக்கிழமை மாலை ஒரு மரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றிக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த மலைப்பாம்பை கிரேன் மூலம் கீழே தள்ளி பிடித்த வனத்துறையினர் மீண்டும் வனத்தில் வீட்டனர். கிரேன் உதவியுடன் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மலைப்பாம்பை பிடித்தது குறித்து திருப்பதி தேவஸ்தான திருமலை திருப்பதி வனத்துறை அலுவலர், பிரபாகர் ரெட்டி கூறுகையில், சேஷாத்ரி நகர் பகுதிக்கு அருகில், சங்கு மிட்டா பகுதிக்கு அருகில் ஒரு ஜெனரேட்டர் இயந்திரத்திற்கு மேலே ஒரு மரத்தில் இந்த மலைப்பாம்பு காணப்பட்டதாக கூறினார்.
அந்த வீடியோவில், திருமலையில் மரத்தில் சுற்றிக்கொண்டிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிப்பவரான பாஸ்கர் கிரேனில் ஏறி, ஒரு கோல் மூலம் கீழே தள்ளினார். வனத்துறையினர் பாம்பு பிடிப்பதை பலரும் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்திருந்தனர். மரத்தில் இருந்து மலைப்பாம்பு கீழே விழுந்ததும் அங்கே இருந்த மக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். பின்னர், கீழே விழுந்த பாம்பை அவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலானது.
திருமலையில் வனத்துறையினர் கிரேன் உதவியுடன் மலைப்பாம்பை பிடித்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாம்பு பிடிக்கப்பட்ட பிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"