தமிழகத்தில் அரசு வேலை பலரது கனவாக உள்ளது. இதற்காக லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்த தேர்வர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இது தொடர்பான மீம்ஸ்களையும் வெளியிட்டுள்ளனர்.
Advertisment
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி வழியாக செய்யப்படுகிறது. இந்த அரசு வேலையை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தனி பயிற்சி மையங்களில் பணம் கட்டி பயிற்சி பெற்று வருகின்றனர். அதேநேரம் பெரும்பாலோனோர் நூலகங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அமர்ந்து பள்ளிப் புத்தங்களை படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டவணையில், குரூப் 2, 2ஏ, குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல் இந்த அட்டவணையில் இடம்பெறவில்லை. குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், தேர்வு 2024 ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையை பார்த்த தேர்வர்கள், நிபுணர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, மிகுந்த வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் படித்து வரும் தேர்வுகளுக்கு, ஒர் ஆண்டில் கிட்டத்தட்ட 1700க்கும் அதிகமான இடங்களை மட்டும் நிரப்பவதற்கான அட்டவணை ஏமாற்றம் அளிப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அதிகமானோர் பங்கேற்பது குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 தேர்வுகள் தான். இதில் குரூப் 1 மற்றும் குரூப் 2,2ஏ தேர்வுப் பற்றி அட்டவணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்பு இருந்தாலும், காலியிடங்கள் விவரங்கள் இல்லை, மேலும் அது 2024 ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் வேதனையுடன் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil