/indian-express-tamil/media/media_files/2025/10/02/sora-22-2025-10-02-08-21-49.jpg)
Top 10 richest person Hurun India Rich List 2025: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக ரூ.12,490 கோடி சொத்துக்களுடன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார்.
Top 10 Richest Person in Hurun India Rich List 2025: எம்.3.எம் (M3M) இந்தியாவுடன் இணைந்து ஹுருன் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட எம்.3.எம் ஹுருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் 2025-ன் 14-வது பதிப்பின்படி, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பெற்றுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து, கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ₹8.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதன் மூலம், இந்தியாவின் முதல் இடத்திற்கான போட்டி இந்த இரண்டு தொழில்துறை ஜாம்பவான்களுக்கு இடையே மட்டுமே உள்ளது என்பது தெளிவாகிறது.
கடந்த ஆண்டு (2024 அறிக்கை), கௌதம் அதானி ரூ.11 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானியை விஞ்சி முதலிடத்தைப் பிடித்திருந்தார். அப்போது அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இருவரின் சொத்து மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3.4 லட்சம் கோடி (30%) குறைந்துள்ளது.
ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் முதன்முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ.2.84 லட்சம் கோடி. இதன் மூலம் இவர் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தியக் கோடீஸ்வரர்களின் வளர்ச்சி
2025-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியல், இந்தியாவில் கோடீஸ்வர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருவதையும் காட்டுகிறது. நாட்டின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை இப்போது 350-ஐத் தாண்டிவிட்டது, இது 13 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் பட்டியல் வெளியிடப்பட்டபோது இருந்ததை விட 6 மடங்கு அதிகமாகும். இந்தப் பில்லியனர்கள் அனைவரின் மொத்தச் சொத்து மதிப்பும் ரூ.167 லட்சம் கோடி ஆகும், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட பாதியாகும்.
இளம் கோடீஸ்வரர்கள்
இளம் தொழில்முனைவோரும் பட்டியலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பெர்பிளக்ஸிட்டி (Perplexity) நிறுவனத்தின் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31), ரூ.21,190 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இந்தப் பட்டியலில் மிக இளைய நபர், ஜெப்டோ (Zepto)-வின் இணை நிறுவனரான கைவல்யா வோஹ்ரா (22) ஆவார். அவரது வர்த்தகப் பங்குதாரரான ஆதித் பலிச்சா (23) இரண்டாவது இளம் கோடீஸ்வரர் ஆவார்.
சொத்து வளர்ச்சியைக் கவனிக்கையில், நீரஜ் பஜாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஆண்டு அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ரூ.69,875 கோடி அதிகரித்து, மொத்தம் ரூ.2.33 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உள்ளனர். பேடிஎம் (Paytm)-ன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, அவரது நிறுவனப் பங்கின் விலை 124 சதவீதம் உயர்ந்ததன் காரணமாக, ரூ.15,930 கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்த கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் துறைகள்
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் மும்பை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது (451 கோடீஸ்வரர்கள்). அதைத் தொடர்ந்து புது டெல்லி (223) மற்றும் பெங்களூரு (116) உள்ளன.
துறைகளைப் பொறுத்தவரை, மருந்துத் துறை (137 கோடீஸ்வரர்கள்) முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து தொழில்முறைப் பொருட்கள் (132) மற்றும் ரசாயனங்கள் & பெட்ரோகெமிக்கல்ஸ் (125) துறைகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் மொத்தம் 101 பெண் தொழில்முனைவோர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 26 பெண்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் செல்வத்தை உருவாக்குவதில் சுயமுயற்சியால் உயர்ந்த கோடீஸ்வரர்கள் (Self-made Billionaires) ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் பட்டியலில் 66 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளனர். புதியதாகப் பட்டியலில் இணைந்தவர்களில் 74 சதவீதம் பேர் தங்கள் சொந்த முயற்சியால் செல்வத்தை உருவாக்கியவர்கள்.
கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்தார் ஷாருக்கான்
2025-ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்களுக்கு ஒரு அசாதாரண ஆண்டாக அமைந்துள்ளது. தேசிய விருதுகளை வென்றதைத் தொடர்ந்து, கிங் கான் முதன்முறையாக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் 2025-ன் படி, ஷாருக்கானின் சொத்து மதிப்பு அதிகரித்து, உலகின் பணக்கார பிரபலங்களில் ஒருவராக அவர் இடம் பிடித்துள்ளார்.
அவர் இந்த உயரடுக்கு பில்லியனர் வட்டத்தில் இணைந்தது மட்டுமின்றி, M3M ஹுருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நட்சத்திரங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். அவரது மொத்தச் சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி (சுமார் ரூ.1.4 பில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், ஷாருக்கானின் சொத்து மதிப்பு இப்போது பல சர்வதேச ஜாம்பவான்களை விஞ்சியுள்ளது. சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள டெயிலர் ஸ்விஃப்ட், சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள நகைச்சுவை நடிகர் ஜெர்ரி சீன்ஃபீல்ட், மற்றும் 720 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள பிரபல பாடகி-நடிகை செலினா கோமஸ் ஆகியோரை விட இந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் பெரிய பணக்காரராக உள்ளார்.
ஹுருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் 2025: டாப் 10 இந்தியர்கள்
தரவரிசை பெயர் 2025 சொத்து மதிப்பு (ரூ. கோடியில்) சொத்து மதிப்பு மாற்றம் (%) நிறுவனம்
1. முகேஷ் அம்பானி & குடும்பம் ரூ.9,55,410 -6% ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
2. கௌதம் அதானி & குடும்பம் ரூ.8,14,720 -30% அதானி
3. ரோஷினி நாடார் மல்ஹோத்ரா & குடும்பம் ரூ.2,84,120 புதிது HCL
4. சைரஸ் எஸ் பூனாவாலா & குடும்பம் ரூ.2,46,460 -15% சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா
5. குமார் மங்கலம் பிர்லா & குடும்பம் ரூ.2,32,850 -1% ஆதித்யா பிர்லா
6. நீரஜ் பஜாஜ் & குடும்பம் ரூ.2,32,680 43% பஜாஜ் குழுமம்
7. திலீப் சங்வி ரூ.2,30,560 -8% சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்
8. அசிம் பிரேம்ஜி & குடும்பம் ரூ.2,21,250 16% விப்ரோ
9. கோபிசந்த் ஹிந்துஜா & குடும்பம் ரூ.1,85,310 -4% ஹிந்துஜா
10. ராதாகிஷன் தமானி & குடும்பம் ரூ.1,82,980 -4% அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
ஆதாரம்: ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.