ட்விட்டரில் இன்று நச்சுனு டிரெண்டான மூன்று விஷயங்கள்

இன்று ட்விட்டரில் இடம் பிடித்த மூன்று முக்கிய சம்பவங்கள். சென்னை வாசிகள் இன்று அப்படி எதை ட்ரெண்ட் செய்தனர்? பட்டியல் கீழே.

1. #itraid

tamilisai-Sathyaraj

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று திரையுலகினர் சார்பில் மௌன போராட்டம் நடைபெற்றது. காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசினார். அப்போது தமிழரின் உரிமைக்காகப் போராடுவோம். ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என்று ஆவேசத்துடன் கூறினார். இதற்குத் தமிழிசை “ராணுவம் வந்தால் தான் சத்யராஜ் பயப்பட மாட்டார். ஐ.டி ரெய்டு வந்தால் எப்படிப் பயப்படுவார் என்று தெரியும்” என்று சாடினார். இதற்கு இன்று சத்யராஜ் பதிலளித்தார். இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், வி.சேகர், வெற்றிமாறன், கெளதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசி வருகின்றனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், “ஐடி ரெய்டு வந்தால் நான் பயப்படுவேன் எனத் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார். நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. மிகப்பெரிய தேசியக் கட்சித் தலைவரான தமிழிசை, அப்பா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து பயப்படத் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

2. #CauveryProtest

Cauvery

கடந்த மார்ச் 29ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுக சார்பில் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தலைமையில் 3வது நாளாகக் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறுகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார். குறிப்பாக நாளைச் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளார். தற்போது தமிழகத்திற்கு வருகை தரும் மோடிக்குப் பலத்த எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. வரும் 12ம் தேதி மாமல்லபுரம் அருகே நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவரின் வருகையின் போது பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3. #Commonwealth2018

Common Wealth Games

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியா தனது எட்டாவது தங்கத்தை கைப்பற்றியது. இதே, 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மற்றொரு வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், இன்று நடந்த ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. 31 தங்கம் வென்றுள்ள ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.

×Close
×Close