நிஜ ஹீரோ, நிதின் நாயர்: மழையில் தவித்தவர்களை காப்பாற்றினார், அதற்கு அபராதமும் கட்டினார்!

நாட்டில் நல்லது செய்வோர்களுக்கு இதுதான் தண்டனையா? என்றும் நிதின் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

மும்பையில்  மழையில்  தவித்தவர்களுக்கு லிஃபட் கொடுத்த இளைஞரை , டிராபிக் போலீஸ் அபராதம் கட்ட  வைத்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உதவி செய்.. பலனை எதிர்ப்பார்க்காதே என்பார்கள். ஆனால் மும்பையில் பலனை எதிர்ப்பார்க்காமல் இளைஞர் செய்த உதவி அவருக்கே எதிர் வினையாக மாறியுள்ளது.மும்பை ஏர்ரோலி சர்க்கிள் பகுதியை சேர்ந்த நிதின் நாயர். கடந்த 18ஆம் தேதி தனது காரில் அலுவலகம் சென்றுக் கொண்டிருந்தார். மும்பையில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் சாலை ஓரங்களில் தண்ணீர் வெள்ளம் போல் பாய்ந்து சென்றுக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் முதியவர் உட்பட மூன்று பேர் அலுவலகம் செல்வதற்காக பேருந்தை எதிர்ப்பார்த்து தண்ணீரில் நின்றுக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த நிதின் இரக்கத்துடன் அவர்களையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது நிதினியின் காரை மறித்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி அஜீத் பாட்டீல், முன்பின் தெரியாத நபர்களுக்கு லிஃபட் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று கூறினார். பின்பு  நிதினின் ஓட்டுநர் உரிமத்தை வாங்கிக் கொண்டு நீதிமன்றத்தில் வந்து ரூ. 2000 கட்டுமாறு  கூறி  அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத நிதின் அதிகாரியிடம் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுப்படாமல் அங்கிருந்து புறப்பட்டு, காரில் ஏற்றிய நபர்களை பத்திரமாக காந்தி நகர் பகுதியில் இறக்கிவிட்டு சென்றார். அந்த காரில் இருந்தவர்கள் நிதினிடம், “எங்களால் தான் உங்களுக்கு இந்த சோதனை. நாங்கள் வேண்டுமானல் அந்த 2000 ரூபாய் பணத்தை தரலாமா? “ என்றும்  கேட்டுள்ளனர். ஆனால் அவரோ “நான் இதை உதவியாக நினைத்து தான் செய்கிறேன்.. பணம் தேவையில்லை..” என்று கம்பீரத்துடன் கூறியுள்ளார்.

மறுநாள் நீதிமன்றம் சென்ற நிதின், ரூ. 2000 பணத்தை கட்டி முறைப்படி ரசீதைப் பெற்று, அதை டிராபிக் போலீஸ் அஜீத் பாட்டீலிடம் காட்டி ஓட்டுநர் உரிமத்தை வாங்கினார். தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை நிதின் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் 18 ஆம் தேதி அன்று தனக்கு நிகழ்ந்த முழு அனுபவத்தை பற்றி கூறிவிட்டு அபராதம் கட்டிய ரசீது புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். மேலும், நாட்டில் நல்லது செய்வோர்களுக்கு இதுதான் தண்டனையா? என்றும் நிதின் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு மறுநாள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. நிதினின் பதிவிற்கு பலரும் வேதனையுடனும், கோபத்துடனும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close