துருக்கியில் இஸ்மிர் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி ஏற்பட்டதால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து பெருக்கெடுத்து ஓடுகிற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மற்றும் கிரீஸில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் அந்நாட்டில் பல கட்டங்கள் சேதமடைந்தது. இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையத்தில் 7.0 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சமோஸில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால், ஊருக்குள் தெருக்களில் புகுந்த கடல்நீர் பெருக்கெடுத்து ஓடுவகிற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சுனாமியின் தாக்கத்தை காட்டியது.
அதே போல, சமோஸ் நகரில் கட்டிடங்கள் மீது பெரிய அலைகள் வந்து மோதுவதை அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் காட்டியது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் துருக்கியின் இஸ்மிரில் இடிந்து விழுந்த கட்டிடத்தையும் வீடியோக்கள் காட்டுகிறது.
துருக்கி மற்றும் கிரீஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
துருக்கியில் ஏற்பட்டுள்ள சுனாமி வீடியோ 2004ம் ஆண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமியை நினைவுபடுத்தும்படியாக உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”