தாதா சாகேப் பால்கே விருது விருது வழங்குவதில் பெண்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? என்று விஜய் டிவி சீரியல் நடிகையான சரண்யா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமலஹாசன் ரஜினியை பாராட்டியதையும் விமர்சித்துள்ளார்.
செய்தி வாசிப்பாளாராக, இருந்து பின்னர் சீரியல் நடிகையானவர் வரிசையில் சரண்யாவும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சி, புதிய தலைமுறை என்று பல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றிய சரண்யா பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் நடிகையானார்.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை தொடர்ந்து ’ஆயுத எழுத்து’ சீரியலிலும் நடித்தார். சமீபத்தில் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது. தற்போது சரண்யா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் ’ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்திலும் நடித்து உள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவித்தது. இதற்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் ரஜினியின் நண்பரும் திரைத்துறை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ’உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்’, என்று கூறியிருந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா, கமலின் இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இதுக்கு வாழ்த்து சொல்லாமலே இருக்கலாமே என்று பதிவிட்டுள்ளார். ரஜினிக்கு வாழ்த்து சொன்ன கமல் தனது பதிவில், திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்ற வரியை குறிப்பிட்டு தான் சரண்யா இந்த பதிவை போட்டுள்ளார் என்று தோன்றுகிறது.
அதே போல கடந்த 21 ஆண்டுகளாக எந்த பெண்ணுக்கும் இந்த விருது ஏன் வழங்கப்படவில்லை? ஏன் இந்த பாரபட்சம் என்று சரண்யா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 52 ஆண்டுகளில் வெறும் 6 பெண்கள் மட்டும் தான் இந்த தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளனர். இறுதியாக , 21 ஆண்டுக்கு முன் ஆஷா போன்ஸ்லேக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil