இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஷில்லாய் கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பிரதீப் மற்றும் கபில் நேகி, ஒரே பெண்ணை மணந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. 'ஜோடிதாரா' என்று அழைக்கப்படும் இந்த அரிய பலகணவர் திருமணம், 'ஹட்டி' பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய நடைமுறையாகும்.
இந்த நவீன உலகில், ஒரு பெண் இரண்டு சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சகோதரர்கள், இது தங்களுக்குச் புதிதல்ல என்றும், தலைமுறை தலைமுறையாக தங்கள் சமூகத்தில் இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
“இந்தத் திருமணம் எங்கள் மீது திணிக்கப்படவில்லை. நாங்கள் மூவரும் பரஸ்பரம் பேசி எடுத்த முடிவுதான் இது,” என்று கபில் நேகி அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துள்ளார். “மற்ற சமூகங்களில் நடக்கும் சில கட்டாயத் திருமணங்கள் போலல்லாமல், எங்கள் கலாச்சாரத்தில் இது ஒரு விருப்பத்தேர்வுதான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு எதிராக வந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரதீப், “எங்களை விமர்சிப்பவர்கள், நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் ஊக்குவிப்பதுதான் எங்கள் நோக்கம். இந்தத் திருமணத்தின் ஒரே நோக்கம் ஒற்றுமையாக வாழ்வதும், எங்கள் சகோதரப் பாசம் தொடர்வதும்தான்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
புகழுக்காகவோ, சமூக வலைத்தளங்களில் வைரலாவதற்காகவோ இந்தத் திருமணம் செய்யப்படவில்லை என்றும், இது இமாச்சலப் பிரதேசத்தின் வருவாய் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையே நிகழும் இந்த விவாதம், பல பழங்குடி சமூகங்களின் அரிய கலாச்சார நடைமுறைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.