இரண்டு சகோதர குட்டி யானைகள் வாயுடன் வாய் வைத்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்டுத் தனமான அன்பை இதற்கு முன் யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள், இங்கே பாருங்கள்.
யானைகள் மனிதர்களைப் போல சமூகமாக சேர்ந்து வாழும் ஒரு விலங்கு. அதைவிட அவை மிகவும் நுண்ணுணர்வு மிக்கவை, அதிக ஞாபக சக்தி கொண்டவை. நிலத்தில் வாழும் பெரிய விலங்கான யானைகள்தான் காடுகளின் பாதுகாவலர்களாக உள்ளன. யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. மனிதர்களைத் தவிர, தரையில் வாழும் உயிரினங்களில் இதுவே அதிக ஆண்டுகள் வாழும் விலங்கு. யானைகள் மிகச் சிறந்த கேட்கும் திறனையும், மோப்பத் திறனையும் கொண்டுள்ளன. அவற்றின் கண்கள் சற்று கிட்டப்பார்வை கொண்டவை என்பதால், இவை தங்கள் பார்வைக்கு மேல் கேட்கும் சக்தியையும், மோப்பத் திறனையும் நம்பி வாழ்கின்றன. யானையின் காதுகள் மட்டுமின்றி, துதிக்கை மற்றும் பாதங்களும் அதிர்வுகளை உணரக்கூடியவை. இவை மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணரக்கூடியவை.
இப்படி பல சிறப்பம்சங்களைக் கொண்ட யானைகள் மனிதர்களைப் போலவே சில உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியவை. யானைகள் சமூக விலங்கு என்பதாலேயே அவை தங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளக்கூடியவை. அந்த வகையில், காட்டில் இரண்டு சகோதர குட்டி யானைகள் வாயுடன் வாய் வைத்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானைகளின் இந்த காட்டுத் தனமான அன்பை இதற்கு முன் யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்.
இரண்டு சகோதர குட்டி யானைகள் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள, ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “சகோதர பாசம் இவ்வளவு அழகாக பார்த்திருக்க முடியாது. இரண்டு குட்டி யானைகள் முத்தமிட்டுக் கொள்கின்றன. இயற்கையிலிருந்து வரும் தூய்மையான, காட்டுத்தனமான அன்பு இது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து, நெட்டிசன்கள் பலரும், யானைகள் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துவதைக் கண்டு வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு பயனர், “யானையின் தலைமுறை Z....பிரஞ்சு முத்தம்” என்று கமெண்ட் செய்துள்ளார்.
யானைகள் மனிதர்களைப் போல முத்தமிட்டுக்கொள்ளும் இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கே பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.