ஒரு அரசியல் தலைவர் வரும்போது அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு கோஷமிடுவதைப் போல, சீனாவின் துணைத் தூதருடன் சேர்ந்து ‘கோ கொரோனா’ என்று மத்திய அமைச்சர் கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி உள்ளது.
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவில் கொரொனா வைரஸ் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஈரான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் விரைவாக பரவத் தொடங்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
Just tell it to leave…. Why didn’t anyone think of that before? #CoronagoCorona presented by our Minister for Social Justice and Chinese Consul-General in Mumbai. pic.twitter.com/1VZemyPYOu
— Suhasini Haidar (@suhasinih) March 10, 2020
இந்த நிலையில், இந்திய குடியரசு கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே, மும்பையில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் துணைத் தூதர் டாங் குயோக்கை மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து ‘கோ கோரோனா’ என்று கோஷமிட்டுள்ளார். இந்த வீடியோ மும்பை இந்தியா கேட் பகுதியில் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
அரசியல் கட்சி ஆர்ப்பாட்டம் போல, ஒரு அரசியல் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல மத்திய அமைச்சர் கோ கொரோனா என்று முழக்கமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொது இடங்களைத் தூய்மைப்படுத்துவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழலில் ‘கோ கொரோனா’ என்று மத்திய அமைச்சர் கோஷமிடும் வீடியோவைப் பார்க்கும் பலரும் “கோ கொரோனா என்றால் போகப் போகிறது.. இதையே ஏன் முன்னாடியே யாரும் யோசிக்க வில்லை” என்று மத்திய அமைச்சரை கிண்டல் செய்து வருகின்றனர்.