கைம்மாறு எதிர்பார்த்து செயல்படும் மனிதர்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் யாரோ ஒருவர் தான் சந்தித்த வெளியால் ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்யும் அளவுக்கு அன்பான ஒருவர் இருக்கிறார் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆம் அப்படியும் சுயநலமில்லாத, கைம்மாறு கருதாமல் உதவும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மனிதகுலத்தின் மீதான உங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 73 வயது முதியவருக்கு வாழ்க்கையில் உயிர்வாழ்வதற்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் உயிர் வாழ்வதற்காக தனது சிறுநீரகத்தை தானமாக அளித்து ரட்சகராக மாறியிருக்கிறார் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள உபெர் டிரைவர்.
இன்ஸ்டாகிராமில் பிரபலமான குட் நியூஸ் இயக்கம் அதன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அசாதாரண கதையைப் பகிர்ந்துள்ளது. பில் சுமியேல் ஒரு டயாலிசிஸ் மையத்திற்குச் செல்லும் வழியில் உபேர் வாடகை வாகனத்தில் சவாரி செய்து கொண்டிருந்தார். அவருடைய டிரைவர் டிம் லெட்ஸ், முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர். சுமியேலுக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் இடையே உரையாடல் நடக்கிறது.
20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சுமியேல் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டார். உள்ளூர் பத்திரிகை செய்திகளின்படி, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் காத்திருக்காமல், சிறுநீரகத்தை தீவிரமாக தேடுமாறு அவரது மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். ஏற்கெனவே, அவர் மூன்றரை ஆண்டுகளாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை பட்டியலில் காத்திருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு சிகிச்சையைத் தொடர்கிறார்.
அன்றைக்கு கார் பயணத்தின் முடிவில், ‘கடவுள் அவரை அன்று தனது காரில் ஏற்றினார்’ என்று தான் கூற வேண்டும். உபேர் டிரைவர் லெட்ஸ் அவரிடம் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்குவதாகக் கூறியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, லெட்ஸின் சிறுநீரகம் சுமியேலுக்கு பொருந்தியது. சுமியேலுக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வருடம் ஆகிவிட்டதாகவும், சுமியேல் தற்போது டெலாவேர் பல்கலைக்கழகத்தின் சிறுநீரக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. லெட்ஸ் இப்போது ஜெர்மனியில் வசிக்கிறார். ஆனால், சுமியேல் தனது “என் உயிரைக் காப்பாற்றிய என்றென்றும் நண்பருடன்” இன்னும் தொடர்பில் இருப்பதாக கூறுகிறார்.
சுமியேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட, மருத்துவமனையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குட் நியூஸ் இயக்கம் பகிர்ந்துள்ளது.
“உண்மை என்னவென்றால்: அந்த ஓட்டுநர் தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தார் அதுமட்டுமல்ல ஓட்டுநர் தான் கூறியபடி செய்கிறார். ஓட்டுநர் ஆரோக்கியமாக உள்ளார். அவர்களின் சிறுநீரகம் பொருந்தியது. உங்களால் முடிந்தால், தானம் செய்யுங்கள்” என்று ஒரு சமூக ஊடக பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்த செய்தி உண்மையில் மனதைத் தொடுகிறது. சுமியேலுக்கு மற்றொரு சிறுநீரகம் தேவைப்படுவதைத் தடுப்பதற்கான தடுப்பு பரிந்துரைகளுடன் மருத்துவர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன். அவருக்கு என்ன வகையான நீரிழிவு நோய் இருந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று மற்றொருவர் கூறினார். “இது நான் அறிந்தவரையில் சுயநலமில்லாத அன்பு, பெருந்தன்மையின் மிக அற்புதமான செயலாக இருக்கலாம். கடவுள் இருவரையும் ஆசீர்வதிப்பார்” என்று மற்றொரு சமூக ஊடகப் பயனர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”