திருமணத்தின்போது மணமகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசக் காவல்துறை மணமகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதால், கைது அச்சத்தால் மணமகள் தலைமறைவான சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
வட இந்தியாவின் பல பகுதிகளில், மக்கள் பெரும்பாலும் திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடுகிறார்கள். அப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும்பொது, தற்செயலாக சில சந்தர்ப்பங்களில் காயங்களும் மரணமும்கூட ஏற்படுகின்றன.
கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தில், திருமணத்தின்போது, மணமகள் மணமகன் அருகில் அமர்ந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவின் அடிப்படையில், உத்தரபிரதேச போலீசார் மணமகள் மீது வழக்கு பதிவு செய்தனர். திருமணத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய அந்த மணமகளின் பெயர் ராக்னி என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தின் சேலம்பூர் கிராமத்தில், ஒரு திருமண நிகழ்ச்சியில், வெள்ளிக்கிழமை இரவு மாலை மாற்றும் நிகழ்விற்கு பிறகு நடந்துள்ளது. இந்த வீடியோவை திருமண விருந்தினரில் ஒருவர் இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
கோட்வாலி ஹத்ராஸ் ஜங்ஷன் காவல்நிலைய ஹவுஸ் அதிகாரி கிரிஷ் சந்த் கௌதம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், “ஹத்ராஸ் ஜங்ஷன் பகுதியில் வசிக்கும் ராக்னி திருமணத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதற்காக அவர் மீது ஐபிசி பிரிவு 25(9) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலிசார் கைது செய்வார்கள் என பயந்து அவர் தலைமறைவாகி உள்ளார். நாங்கள் அவரைத் தேடுகிறோம். மணப்பெண்ணிடம் கைத்துப்பாக்கியை ஒப்படைத்த நபரையும் அடையாளம் காண முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார்.
இதே போல, ஜூன் 2021-ல், ஒரு மணமகள் தனது திருமணத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் ஜேத்வாரா பகுதியில் நடந்த திருமணத்தில் மாலை மாற்றும் விழா மேடைக்கு செல்லும் முன் ரூபா பாண்டே தனது மாமா ராம்வாஸ் பாண்டேவின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"