கேரளா மாநிலம் அதிரப்பள்ளி சாலையில் கொம்பன் யானையிடம் இருந்து உயிர் தப்பிய வனத்துறை அதிகாரிகள் தொடர்பான பரபரப்பு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. .
வால்பாறையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆதரப்பள்ளி வனவிலங்குகள் அதிகம் நடமாடக் கூடிய அடர்ந்த வனப் பகுதியாகும். இந்த வனப்பகுதியில் உள்ள சாலையில் பகல் நேரத்திலேயே அதிக எண்ணிக்கையில் காட்டுயானைகள் சாலையின் குறுக்கே நிற்பது வழக்கமான ஒன்று. யானைகள் மட்டுமல்லாது காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் என பல வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் மலுக்குப்பாறை அதிரப்பள்ளி சாலையில் யானை பள்ளம் என்ற பகுதியில் யானை ஒன்று சாலையில் நிற்பதாக அதிரப்பள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முற்படும்போது எதிர்பாராத விதமாக யானை வனத்துறையினரின் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் பின்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யானைகள் நடமாட்டத்தால் "மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை" வால்பாறையில் இருந்து மளுக்கப்பாறை வழியாக சாலக்குடிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சாலக்குடி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil