புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் திங்கள்கிழமை காலை 9.15 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நின்றது. இதனால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை சரக்கு ரயில் என்ஜின் இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லியில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திங்கள்கிழமை காலை உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா ரயில் நிலையம் அருகே நின்றது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நின்றதால், ரயிலில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று சரி செய்ய முயன்றனர். ஆனால், சரி செய்ய முடியவில்லை.
இதையடுத்து, பர்தானா மற்றும் சம்ஹோ ரயில் நிலையங்களுக்கு இடையே நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை சரக்கு ரயில் என்ஜின் மூலம் பர்தானா ரயில் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயிலில் சுமார் 750 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பயணிகள் கான்பூரை அடைந்த பிறகு ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் வழியாக வாரணாசிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவார்கள் என்பதை ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்தனர்.
புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த இந்த ரயிலில் காலை 9.15 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இப்பிரச்னையை சரிசெய்ய பொறியாளர்கள் முயற்சி செய்தும் ரயிலை மீண்டும் இயக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது பர்தானா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, அங்கு தொழில்நுட்ப குழுவினர் ரயிலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“