வேலூர் மாவட்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போலீஸ் அதிகாரி உணவு ஊட்டி விடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காவலர்கள் பொதுமக்களின் நண்பர் என்பார்கள். இந்த வாக்கியம் எத்தனை முறை சாத்தியமாகியிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் இது அரங்கேறும் போது பாராட்டுக்கள் குவியாமல் இருந்ததில்லை.
வைரல் நாயகன்:
காவல் துறை அதிகாரிகள் என்றாலே கொடூரமானவர்கள், இரக்க குணம் அற்றவர்கள் என்ற பிம்பம் பொதுமக்கள் மத்தியில் மேலூங்கி இருக்கிறது. இதற்கு பல காரணங்களை கூற;ஆம். கர்ப்பிணி உஷா மரணம் தொடங்கி, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை காவல்துறையினர் குறித்த பார்வை பயங்கரமாகவே இருந்து வருகிறது.
ஆனால், கடந்த 2 நாட்களாக வேலூரை சேர்ந்த காவல் அதிகாரிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. எல்லா போலீசாரையும், தவறாக பார்க்க முடியாது என்று உரக்க சொல்லியுள்ளது. ”இதுப்போன்ற காவலர்கள் இருந்தால் நாங்கள் ஏன் அவர்களை எதிரியாக பார்க்க போகிறோம்” என்று இளைஞர்கள் கூறி வருகின்றன. இப்படி இணையமே பாராட்டும் அளவிற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
/tamil-ie/media/media_files/uploads/2018/09/3-45.jpg)
ஆம்பூர் வீரக்கோயில் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதிவழியாக சென்ற மக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார்கள்.இதையடுத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று அவரைப் பார்த்தார்.
அப்போது சாப்பிடாததால் மயக்க நிலையில் இருந்த அந்த நபருக்கு காவல் உதவி ஆய்வாளர் அருகில் இருந்த ஹோட்டலில் உணவு மற்றும் தண்ணீர் வாங்கி வந்து பாதிக்கப்பட்டவருக்கு அவரே ஊட்டிவிட்டார்.பல நாட்களாக அவர் சாப்பிடாமல் இருந்ததால் அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.உணவருந்திய பின்பு சற்று தெம்புடன் காணப்பட்டார்.இருப்பினும் அவரது உடல்நிலையும் நலியுற்று இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தார் உதவி ஆய்வாளர்.சிகிச்சைக்கு பிறகு அவர் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
காவல் அதிகாரி விஜயகுமாரின் இந்த செயல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.