3 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவனை காயமின்றி காப்பாற்றிய சூப்பர் போலீஸ்!

3 ஆவது மாடியிலிருந்து விழும் சிறுவன் காவலரின் கையில் வேகமாக வந்து விழுகிறான்

எகிப்தில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவனை சிறு காயமின்றி காப்பாற்றிய சூப்பர்  போலீஸூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

எகிப்தின் அசீயூட் நகரத்தில் உள்ள தனியார் வங்கியின் சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது அங்குள்ள இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் எகிப்தின் போலீஸ் மூவர், வங்கிக்கு அருகில் நின்றுக் கொண்டுள்ளனர்.

அப்போது, அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர், காவலர்களுக்கு அருகில் இருக்கும் அப்பாட்ர்மெண்டில் இருந்து குழந்தை ஒன்று, மேலிருந்து கீழே ஆபத்தான முறையில் எட்டிப்பார்ப்பதாக பதறியுள்ளார். இதைப் பார்த்த காவலர்கள் உடனடியாக குழந்தையின் பெற்றோரை எச்சரிக்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள்.

ஆனால், அதற்குள் குழந்தை குதித்து விடுகிறது. அடுத்தக்கணமே, ஆபத்தை உணர்ந்த காவலர் ஒருவர் அருகில் இருக்கும் பெட்ஜீட் ஒன்றை விரித்து பிடிக்கிறார். அவருக்கு முன்பு நின்றுக் கொண்டு மற்றொரு காவலர் தனது இருகரங்களை நீட்டுகிறார். 3 ஆவது மாடியிலிருந்து விழும் சிறுவன் காவலரின் கையில் வேகமாக வந்து விழுகிறான். இருப்பினும், அந்த காவலர் அச்சிறுவனை பத்திரமாக பிடிக்கிறார். இந்த காட்சிகள் எகிப்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அதேசமயம், 3 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த 5 வயது அச்சிறுவன் சிறு காயமின்றி உயிர் பிழைத்துள்ளான். இருப்பினும்  அந்த சிறுவனை பிடித்த காவலருக்கு கையில் காயம் ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு சிறுவனின் பெற்றோர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

 

×Close
×Close