நாம் ஜாலிக்காக செய்கிறோம் என்ற பெயரில் செய்யும் பல விஷயங்கள் மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடிய வகையில் அமைந்துவிடும். பெரும்பாலான விஷயங்கள் முட்டாள்தனமனவையாக இருக்கும். அப்படித்தான், குஜராத்தில் சில இளைஞர்கள் செய்த காரியம் முட்டாள்தனமானதாக அமைந்திருக்கிறது.
குஜராத்தில் உள்ள கிர் காடுகளில், தங்களுடைய ஜாலிக்காக இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சிங்கங்களை வேகமாக துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரவு முழுதும் துரத்தியது மட்டுமல்லாமல், பகலிலும் அந்த சிங்கங்களை அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் துரத்தியுள்ளனர். இதனால், அந்த சிங்கங்கள் பதைபதைக்க ஓடுகின்றன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய சிங்கங்கள் அதிகம் வாழும் கிர் காடுகளில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே விலங்கின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.