ஈராக் - ஈரான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள குர்திஸ்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாட்டு மக்களையும் இந்த நிலநடுக்கம் அச்சம் கொள்ள வைத்தது. இந்த பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, நிலநடுக்கத்தின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் பரவிவந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஈராக்கில் உள்ள எர்பிலில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி ஸ்டுடியோவில் நேரலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது, நிலநடுக்கம் ஏற்பட்டு அங்கு பேச வந்திருந்த சிறப்பு விருந்தினர் பீதியாகும் வீடியோதான் அது.
நிலநடுக்கம் ஏற்படும்போது, “இங்கே நிலநடுக்கம் ஏற்படுகிறது. நான் வெளியே செல்கிறேன்”, எனக்கூறிவிட்டு அந்த விருந்தினர் வெளியேறுகிறார். அதேபோல், அந்த நேரலையை வழங்கிக்கொண்டிருக்கும் தொகுப்பாளரும், தானும் நில நடுக்கத்தை உணர்வதாக தெரிவிக்கிறார். உடனடியாக, நிகழ்ச்சி தடைபடுகிறது.