PMK, DMDK party members Clash in Vikravandi: விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக - தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவின்போது ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரும் அதிமுக வேட்பாளரும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூட்டணியில் உள்ளன.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவின்போது கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குபதிவு நடைபெற்று வந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு காவலர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போதும் அவரையும் மீறி தேமுதிக நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் பாமக நிர்வாகி மணிகண்டனை தாக்கினர். உடனே அங்கிருந்து மற்ற காவலர்கள் வந்து அவர்களைத் தடுத்து அனுப்பிவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், மோதல் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
பாமக - தேமுதிக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் அங்கே இருந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.