ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான ஜஹான் தாப்பை அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் மறந்து இருக்க மாட்டார்கள். 25 வயதில் 3 பிள்ளைகளுக்கு தாயான, இவர், 5 மாத கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதும், பசியால் அழுத குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தனது தேர்வினை ஜஹான் எழுதி முடித்தது பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இவரின் கடமையையும், தாய்மை உணர்வையும் கண்டு வியந்து போன, பள்ளி தலைமை ஆசிரியர், தரையில் அமர்ந்துக் கொண்டு குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே அவர் தேர்வு எழுதிய புகைப்படத்தை ஃபேஸ்ப்புக்கில் பதிவிட்டார். அடுத்த 1 மணி நேரத்திற்குள் ஜஹான் தாப்பிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. பெண்களுக்கு அதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கும், ஆப்கானிஸ்தான் நாட்டில், இஸ்லாமிய பெண் துணிச்சலாக இந்த செயலை செய்தது பலரையும் திகைக்க வைத்தது.
இவ்வளவும் கஷ்டப்பட்ட தேர்வு எழுதிய ஜஹானின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அவர், கூடிய விரைவில் கல்லூரியில் சேர்ந்து படிக்கவுள்ளார். கூலி தொழிலாளியான ஜஹாவின் கணவர், நில்லி நகரிலுள்ள நாசிர்கோஸ்ரா என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் அவரை படிக்க வைத்து வந்துள்ளார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஜஹான் தற்போது மேற்படிப்பு படிக்க அரசு பல்கலைகழகத்திற்கு செல்லவுள்ளார்.
ஜஹான் குறித்து முதலில் வெளியான செய்தி
அவர் வசிக்கும் கிராமத்தில், பெண்கள் படிப்பதே அரிதான காரியமாம். பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி தான் ஜஹான், தனது கணவரின் உதவியால் படிப்பை தொடர்ந்து வருகிறார். அவரின் நீண்ட நாள் கனவே, தான் படித்து நல்ல நிலைக்கு சென்று, அங்குள்ள மற்ற பெண் பிள்ளைகளையும் படிக்க வைப்பது தானாம். அவர் ஒருவர் படித்தால் அவரின், கிராமமே, மற்ற பெண்களை படிக்க வைக்க முன் வருவார்கள் என்று நம்பிக்கை அவருக்கு பெருமளவில் உள்ளதாம்.
ஜஹானின் குடும்ப சூழ்நிலையைப் பட்ட ஆப்கானிஸ்தான் அரசு, அவரின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், அவர் படித்து நல்ல வேளைக்கு செல்லும் வரை, அவர் குடியிருக்கும் வீட்டிற்கும் வாடகையை அரசே வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.