உங்களுக்கு வெளிநாட்டு பேட்ஸ் மேன் பிடித்தால் சரி.. எங்களுக்கு பிடித்தால் தவறு! என்ன நியாயம் கேப்டன்?

விராட் வீடியோ  மூலம் பதில் அளிப்பாரா?

இந்திய ரசிகர் ஒருவருக்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கூறியிருந்த பதில், இன்று அவருக்கே எதிர்மறையாக மாறி கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

விராட்டின் வீடியோ பதில்:

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பிறந்த நாள் கடந்த 5 ஆம் தேதி அவரின் ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.  விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,  கோலிக்கு வாழ்த்து கூறிய இந்திய ரசிகர் ஒருவர், இந்திய பேட்டிங்கை  குறித்தும் விமர்சித்திருந்தார். அந்த ரசிகர் தனது  ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது “ இந்திய பேட்ஸ்மேன்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதை நான் ரசித்து பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த பதிவுக்கு  விராட் கோலி பிரத்யேகமாக வீடியோ மூலம் பதில் அளித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்  நேற்றைய தினம் அந்த ரசிகரின் பதிவுக்கு பதில் அளித்த விராட்  “ நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உலகில் எங்காவது ஒரு மூலைக்கு சென்று விடுங்கள்.

இந்தியாவில் இருந்து கொண்டு ஏன் மற்ற நாட்டு விளையாட்டு வீரர்களை ரசிக்கிறீர்கள்?. நீங்கள் என்னை விரும்பவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், வெளிநாட்டு வீரர்களை ரசிக்கும் நீங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நான் எண்ணவில்லை. எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உணருங்கள்” என்று  காட்டமாக கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் விராட்டின் இந்த கருத்திற்கு எதிராக ரசிகர்கள் பலரும்  விமர்சனத்தை  முன்வைத்தனர். குறிப்பாக  வெளிநாட்டு  கிரிக்கெட் வீரர்களின்  பேட்டிங்கை  ரசிப்பதாக கூறி ரசிகரின் கருத்திற்கு பொங்கிய விராட்,  ஒருமுறை தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வீரர் ஹர்சல் கிப்ஸ் என்று  கூறியிருக்கும் வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைப்பெற்ற  ஐசிசி அண்டர் 19   உலககோப்பையில்  வீரர்கள் அறிமுகப்படுத்தப்படும்  விளம்பரத்தில் விரார் கோலி தனது பிடித்த பேட்ஸ் மேன் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹர்சல் கிப்ஸ் என்று கூறுகிறார். இந்த பதிவை வீடியோ ஆதரத்துடன் வெளியிட்டுள்ள  கிரிக்கெட் ரசிகர்கள், ”உங்களுக்கு வெளிநாட்டு பேட்ஸ் மேன் பிடித்தால் சரி.. எங்களுக்கு பிடித்தால் தவறு! என்ன நியாயம் கேப்டன்? ” என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கும் விராட் வீடியோ  மூலம் பதில் அளிப்பாரா? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close