உலக ஆமைகல் தினம் மே 23-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில், பொரிப்பகங்களில் இருந்து ஆமைக் குஞ்சுகளை தன்னார்வலர்கள் கடலில் விடுவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் உலக ஆமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆமைகளில் 300 வகைகள் உள்ளன. தற்போது அவற்றில் 129 ஆமை இனங்கள் அழிந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆமைகள் அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாப்பாக வாழவும், அழிவில் இருந்து அவற்றை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘உலக ஆமைகள் தினம்’, அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே 23-ம் தேதி உலக ஆமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1990-ம் ஆண்டு கணவன்-மனைவியான சூசன் டெல்லெம் மற்றும் மார்ஷல் தாம்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அமெரிக்க ஆமை மீட்பு என்ற அமைப்பு, உலக ஆமை தினத்தை முதன்முதலில் கொண்டுவந்தது.
ஆமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு வனத் துறையும் தனது பங்களிப்பை செய்துள்ளது. சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில், சில ஆண்டுகளாக குஞ்சுபொரிக்கப்பட்ட ஆமைகளை கடலில் விடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், உலக ஆமைகள் தினத்தில், தமிழக வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில், ஆமைக் குஞ்சுகளை தன்னார்வலர்களும் வனத் துறை பணியாளர்களும் கடலில் விடுக்கும் பணியில் ஈடுபட்ட வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், அழகான குட்டி ஆமைகள் கடலை நோக்கி மெல்ல ஊர்ந்து செல்கின்றன. அதை தன்னார்வலர்களும் மக்களும் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “உலக ஆமைகள் தின வாழ்த்துக்கள். தமிழகத்தில் ஆமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக அரசின் அறிவிப்பின்படி சென்னையில் 6.30 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஆமை பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிக ஆமை குஞ்சு பொரிப்பகங்களை அமைப்பதற்கும், அதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ஆமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். அர்ப்பணிப்புள்ள வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி, ஆமைகள் பாதுகாப்பில் தமிழகத்தில் ஒரு புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளோம். #WorldTurtleDay2023 #Turtles காணொளி – சென்னை பெசன்ட் நகர் குஞ்சு பொரிப்பகத்தில் தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆமை குஞ்சுகளை விடுவிக்கின்றனர்.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“