ரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி!

சொகுசு கப்பலில் தடை விதிக்கப்பட்ட இடத்தில் எல்லையை மீறி எடுத்துக் கொண்ட செல்பி தான்.

மகாராஷ்டிரா முதல்வர் மனைவியின் செல்பி மோகமும், அவரின் செயலைக்கண்டு பாதுகாப்பு அதிகாரி தலையில் அடித்துக் கொண்ட வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா முதல்வர் மனைவி செல்பி:

செல்பி.. இதனால் பலியான உயிர்களும் அதிகம். இந்த செல்பியால் வைரலான வீடியோக்களும் அதிகம். இந்த லிஸ்டில் தற்போது புதியதாக சேர்ந்திருக்கும் வீடியோ மகாராஷ்டிரா முதல்வர் மனைவி இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பலில் தடை விதிக்கப்பட்ட இடத்தில் எல்லையை மீறி எடுத்துக் கொண்ட செல்பி தான்.

இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு கப்பலான ஆங்கிரியாவின் சேவை மும்பை – கோவா இடையே நேற்று தொடங்கப்பட்டது. இதில் 399 பயணிகள் தங்கும் அதி நவீன வசதியுடன் உள்ளது. இதில் பயணிப்பதற்கு சுமார் ரூ. 7,000 முதல் ரூ. 12,000 வரை வசூலிக்கப்படுகிறது

இந்நிலையில் நேற்று மும்பையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த அதி நவீன சொகுசு கப்பலை துவங்கி வைத்தார். இதில் பயணித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாஸ் மனைவியான அம்ருதா பட்னாஸ் தீடிரென்று ஆங்கிரியா சொகுசு கப்பலின் ஆபத்தான தடை விதிக்கப்பட்ட எல்லையை மீறி செல்பி எடுத்து கொண்டிருந்தார்.

ஒருபக்கம் கடல் அலைகள் வேகமாக மேலூங்க , முதல்வரின்  மனைவி அதையும் சற்றும் பொருட்படுத்தாமல் செல்பி எடுத்துக்  கொண்டிருந்தது அங்கிருப்பவர்களை எரிச்சலூட்டியது. அப்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தலையில் அடித்துக் கொள்ளும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.  இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மராத்தி மொழி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு இச்சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த அம்ருதா பட்னாவிஸ், ‘நான் ஏதாவது தவறு செய்ததாக சிலர் கருதினால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

நான் செல்பி எடுக்க முயன்ற இடம் அவ்வளவு ஆபத்தான பகுதி அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், இதுபோல் செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் சவாலான காரியங்களில் ஈடுபட கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close