பாகிஸ்தானில் உள்ளூர் செய்தி சேனலில் நிருபராக பணிபுரிந்துவரும் ஒருவர், தன் திருமணத்தை நேரலை செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிட்டி 41 என்ற செய்தி சேனலில் நிருபராக பணிபுரிந்துவரும் ஹனன் புகாரி என்பவர் தான் இந்த விநோதத்தை நிகழ்த்தியவர். தன்னுடைய திருமணத்தை நேரலையில் நின்று செய்தியாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்திக்கு உள்ளாக்கியுள்ளார் ஹனன் புகாரி.
மணமகன் உடையில் கையில் ‘மைக்’கை பிடித்துக்கொண்டு, தன் உறவினர்களிடமும், மனைவியிடமும் திருமணம் குறித்தும், தற்போது அவர்களுடைய உணர்வு எப்படியுள்ளது எனவும் நேரலையில் புகாரி கேள்வி எழுப்பியது சிரிப்பை வரவழைக்கும் விதமாகவும் இருந்தது.
தன்னுடைய திருமணம் காதல் திருமணம் என்பதால் தன் மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதாக புகாரி நேரலையில் தெரிவித்தார். தன்னுடைய தந்தை, தாய், மாமனார் ஆகியோரிடமும் திருமணம் குறித்து அவர்களுடைய உணர்வுகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்கிறார் புகாரி.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தன்னுடைய திருமணத்தை நேரலை செய்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.