ஓடும் ரயில்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பது இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பெரிய சாதனை போல தோன்றுகிறதே தவிர, அதில் இருக்கும் ஆபத்து புரிவதே இல்லை. இந்தியா முழுவதும் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளில் யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார். அதற்கு அதிகப்படியான காரணம் அலட்சியம் மற்றும் கவன குறைவு. காதில் ஹெட் ஃபோன்ஸ் மாட்டிக்கொண்டு தண்டவாளம் கடப்பது, செல்போனில் பேசிக்கொண்டே ரயில் பாதையில் நடப்பது மற்றும் ரயில்களில் பயணிக்கும் போது தொங்கிக் கொண்டே செல்வது எனப் பல கவனக் குறைவாலும், அலட்சியத்தாலும் பலர் படுகாயமடைகின்றனர். இதில் பெரும்பாலான விபத்து மரணத்திலேயே முடிகிறது.
அத்தகைய விபத்து ஒன்று பெங்களூரு அருகே நிகழ்ந்துள்ளது. வட மாநிலத்தில் இருந்து பெங்களூரூ அருகே வந்து கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்றில் இளைஞர் ஒருவர் கம்பியை பிடித்துத் தொங்கியபடி வந்தார். ரயில் செல்லும் வேகத்தில், இரண்டு கைகளால் மட்டுமே உடலை அந்தக் கம்பியில் தாங்கிப் பிடித்து வந்திருந்தார். இதனைப் பெரிய ஸ்டண்ட் என்று நினைத்து வந்திருந்த அவருக்குக் காத்திருந்தது பெரிய அதிர்ச்சி. நீண்ட நேரம் தொங்கியதால், நிலை தடுமாறி ஓடும் ரயிலில் இருந்து வேகமாக விழுகிறார். இதனை ரயிலில் பயணிக்கும் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலர் அந்த இளைஞரை கடுமையாக ஏசியும், சிலர் உடனிருக்கும் பயணிகள் செயின் பிடித்து இழுத்திருக்கலாம் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.