ஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் பகலில் நைட்டி அணிந்து நடமாட தடை விதித்தும், மீறினால் 2000 ரூபாய் அபராதம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நைட்டி அணிய தடை:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தோகலாப்பள்ளி கிராமம் உள்ளது.இங்கு1,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு கடைகள், கிராமக் கூட்டங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கிறது என்று தோகலாப்பள்ளி கிராமத்தில் உள்ள மூதாட்டிகள் கூறியுள்ளனர்.
இதனால்,ஆறு மாதங்களுக்கு முன்பே அங்கு பெண்கள் நைட்டி அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பெண்கள் யாரும் நைட்டி அணியக் கூடாது. இந்த தடையை மீறி நைட்டி அணிபவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இது குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்குச் சன்மானமாக ரூ.1,000 வழங்கப்படும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
”நைட்டி அணிவதற்கு வசதியாக இருந்தாலும், வீட்டிற்கு வெளியே செல்வதற்கு இந்த உடை சரியானது இல்லை. நைட்டி என்பது இரவு நேரங்களில் அணியக்கூடிய உடையாகும். இது இந்து கலாச்சாரத்தைச் சேர்ந்தது கிடையாது. இன்றைய தலைமுறையினர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சேலை, பாவடை தாவணி அணியவதில்லை. இவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல், முன்னோர்கள் விதித்த கட்டுப்பாடுகளுக்கு இணங்கிச் செல்ல மறுக்கின்றனர்” என புகார் தெரிவிக்கின்றனர் அங்கு வசித்துவரும் பெரியவர்கள்.
இந்த உத்தரவு ஆறு மாத காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தீபாவளியின் போதுதான் உள்ளூர் ஊடகங்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இச்செய்தி வெளியானதும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பது சரியானது கிடையாது என அந்த கிராம மக்களிடம் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
விசாரணையின் போது இதை எதிர்த்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை. அதனால் அதிகாரிகளும் போலீசாரும் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.