காட்டு வழியாக செல்லும் லாரியை தீடீரென சாலைக்கு வந்து நிறுத்திய யானை என்ன செய்யப்போகிறதோ என்று அஞ்சியவர்களுக்கு, அந்த யானை வியப்பை அளிக்கும்படியாக செய்த செயலின் வீடியோ சமூக ஊடகஙங்களில் வைரலாகி வருகிறது.
காடுகளை ஆக்கிரமித்து சாலைகள் அமைத்தால் வன விலங்குகள் என்ன செய்யும். வன விலங்குகள் – மனிதர்களுக்கு இடையே மோதல் நிகழ்ந்தால் வனவிலங்குகள் அட்டகாசம் செய்கிறது என்று சொல்லாதீர்கள். மனிதர்கள்தான் வன விலங்குகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அட்டகாசம் செய்கிறார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
காடுகள் வழியாக செல்லும் சாலைகளில் செல்லும்போது வன விலங்குகளுக்கு உணவு அளிக்காதீர்கள். அல்லது வன விலங்கு பூங்காக்களுக்கு செல்லும்போது அவற்று உணவு அளிக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இந்த அறிவுரையை மதிக்காமல் வன விலங்குகளுக்கு உணவு அளிக்கும்போது, இதற்கு பழகிப்போய் அதன் இயல்பு மாறுகிறது. பிறகு, உணவுக்காக மனிதர்களைத் தேடிச் செல்கின்றன. அப்போது மனிதர்களுக்கும் வனவிலங்க்குகளுக்கும் மோதல் நிகழ்கிறது.
இந்த வீடியோவில் காட்டு வழியாக செல்லும் சாலையில் ஒரு லாரி சென்றுகொண்டிருக்க திடீரென காட்டுக்குள் இருந்து சாலைக்கு வரும் யானை அந்த லாரியை நிறுத்துகிறது. அதைப்பார்க்கிற அனைவரும் பதறிப்போகிறார்கள்.
ஆனால், அந்த யானை அந்த லாரியை எதுவும் செய்யவில்லை. லாரியில் ஏற்றி வந்த கரும்பை எடுத்துக்கொண்டு அந்த லாரியை போக விடுகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் எவரையும் யானையின் செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவைப் பற்றி ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “யானைகளுக்கு இந்த வழியில் உரிமையில் உள்ளது. சுவையான சிற்றுண்டிக்காக கரும்பு லாரிகளை கடந்து செல்வதை நிறுத்துகிறது இந்த யானை. இந்த வீடியோ தாய்லாந்தில் இருந்து வைரலாகி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
காட்டு வழியே செல்லும் சாலையில் கரும்புகளை ஏற்றிச் செல்லும் லாரியை நிறுத்தி தனக்கு தேவையான கரும்பை எடுத்துக்கொள்ளும் யானை வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“