சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பழமொழி கேள்விப் பட்டிருப்போம். அப்படி, அமைதியாகவும் மந்தமான சுபாவம் உள்ள காட்டு எருமை ஒன்று பொறுமை இழந்து மூர்க்கத் தனமாக சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகள் வீடியோ எப்போதும் நெட்டிசன்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. அதனால்தான், சமூக ஊடகங்களில் தினமும் ஏதேனும் ஒரு வனவிலங்கு வீடியோ ட்ரெண்டிங் ஆகிறது. அதிலும் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான வீடியோ என்றால் வைரலாகி விடும்.
அந்த வகையில், விலங்குகளில் மிகவும் மந்தமானது என்றும் அமைதியானது பொறுமையானது என்று எருமையைத்தான் சொல்வார்கள். அதனால்தான், சிலர் திட்டுவதற்குகூட எருமையின் பெயரை பயன்படுத்துவது உண்டு. மிகவும் சாதுவான பொறுமையான விலங்கான எருமை திடீரென மூர்க்கமாகிவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ சான்றாக உள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், காட்டில் சிங்கம் ஒன்று ஒரு எருமையை தாக்கி வீழ்த்திக்கொண்டிருக்கும்போது அங்கே சுற்றி நின்ற எருமைகளில் ஒன்று பொறுமை இழந்து மூர்க்கமாக ஓடி வந்து சிங்கத்தை தூக்கி வீசி பந்தாடி திகிலை ஏற்படுத்துகிறது. எருமையின் எதிர்பாராதா தாக்குதலால் சிங்கம் நிலைகுலைந்து துவண்டு துவண்டு விழுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து சுஷாந்த் நந்தா குறிப்பிடுகையில், “உயிருக்காக போராட துணிச்சல் இருக்கும்போது யாரும் பலவீனமானவர்கள் இல்லை. இங்கே காட்டு எருமை சிங்கத்தை அதன் அனைத்து சக்தியையும் கொண்டு தூக்கி வீசி பறக்க விடுகிறது. இதேபோல், இந்திய காட்டு எருமை புலிகள் மற்றும் சிறுத்தைக்கு எதிராக சில சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வேட்டை விலங்குகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"