viral video: காட்டு வழியே செல்லும் சாலைக்கு வந்த ஒற்றைக் கொம்பன் காட்டு யானையைக் கண்டு பயந்து வாகனங்கள் நிற்கையில், காரில் இருந்து இறங்கி சென்ற ஒரு விவசாயி யானையை வணங்கி செய்த செயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கு என்றால் அது யானைதான். அது மிகப்பெரிய விலங்கு மட்டுமல்ல, விலங்குகளில் மிகவும் நுண்ணுணர்வு கொண்டதும் யானைதான். யானைகளே காடுகளை விரித்தவர்களாகவும்
கல், மண், மரம், மலை, பறவை, விலங்குகளையும் தெய்வமாக பார்க்கும் மரபு இந்தியர்களிடம் உள்ளது. அந்த வகையில், மக்கள் யானையை கஜராஜாவாகவும் விநாயகராகவும் வணங்கும் வழக்கம் உள்ளது. மிகப் பெரிய உருவம் கொண்ட யானைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான விலங்காகவும் இருக்கிறது.
இந்திய வனத் துறை அதிகாரிகள், காடுகளில் பதிவு செய்யப்படும் அரிய நிகழ்வுகளின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அத்தகைய வீடியோக்கள், வனவிலங்குகளைப் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள வீடியோவில், சாலைக்கு வந்த காட்டு யானையைக் கண்டு பயந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்த ஒரு விவசாயி யானையை வணங்கி செய்த செயலின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், நிறைய வாகனங்கள் போக்குவரத்து மிக்க காட்டு வழியே செல்லும் சாலைக்கு ஒரு காட்டு யானை, மரத்தின் அருகே பிளிறியபடி நிற்கிறது. யானையைப் பார்த்து பயந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்துகிறார்கள். அப்பொது அவ்வழியே சென்ற ஒரு காரில் இருந்து இறங்கிய, தோளில் பச்சைத் துண்டு அணிந்த நபர் யானையை நோக்கிச் செல்கிறார். யானையை நோக்கி கையெடுத்து கும்பிட்டு வணங்குகிறார். அந்த யானை பிளிறுகிறது. மண் தரையை உதைத்து மண்ணைக் கிளறுகிறது. அவர் ஏதோ யானையிடம் சொல்கிறார். யானை பின்னோக்கி செல்கிறது. பிறகு, அவர் யானையை வழி மறித்தபடி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி நின்றுகொண்டு சாலையில் நிற்கும் வாகனங்களின் டிராஃபிக்கை சீர் செய்கிறார். யானை பிளிறினாலும், அவர் பயப்படாமல் நிற்கிறார். யானை அவரை எதுவும் செய்யாமல் நிற்கிறது. வாகனங்கள் சென்ற பிறகு, அவர் யானையின் காலில் விழுந்து வணங்கிவிட்டு மீண்டும் வாகனத்தை நோக்கிச் செல்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “யானைகள் மென்மையான மிகப் பெரிய விலங்குகள் என்பதற்கு இதைவிட வேறு ஏதாவது ஆதாரம் வேண்டுமா? ஆனால் காட்டு விலங்குகள் எப்போது வேண்டுமானாலும் காட்டு விலங்குகளின் குணத்துக்கு மாறலாம். நீங்கள் இந்த முட்டாள்தனமான செயல்களை முயற்சி செய்யாதீர்கள்.” என்று குறிபிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“