வழிப்பறி கொள்ளையனுக்கு காபி வாங்கிக்கொடுத்த இளகிய மனம் படைத்த பெண்

அங்கு பெண்ணின் பர்ஸை திருடிக்கொண்டு ஓடியவரை பிடித்த மற்றொரு பெண், அவருக்கு காபி வாங்கிக்கொடுத்து அவரையே அசத்தியிருக்கிறார்.

நம்மூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் நம் கையில் சிக்கினால், அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல், சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழிப்பறியில் ஈடுபடுபவர்களை மரம், மின்கம்பத்தில் கட்டிவைத்து நையப்புடைக்கும் சம்பவங்களும் ஏராளம். ஆனால், கனடாவில் நடைபெற்ற சம்பவம் சற்று வித்தியாசமாக இருந்தது. அங்கு பெண்ணின் பர்ஸை திருடிக்கொண்டு ஓடியவரை பிடித்த மற்றொரு பெண், அவருக்கு காபி வாங்கிக்கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கனடாவில் டெஸ் அபோகோஷ் என்ற பெண் பணி அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பிகொண்டிருந்தார். அப்போது, பெண்மணி ஒருவர் “அவனை பிடியுங்கள். என்னுடைய பர்ஸை திருடிக்கொண்டு போகிறான்”, என அலரும் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட டெஸ், சற்றும் தாமதிக்காமல் வேகமாக ஓடி, ஒரு சந்தருங்கே பதுங்கி நின்றுகொண்டிருந்த திருடனை பிடித்தார்.

இதையடுத்து, பயந்துபோன அந்நபர் அழுதுகொண்டே பர்ஸை டெஸ்ஸிடம் திருப்பி அளித்திருக்கிறார். அதனை பர்ஸின் உரிமையாளரிடம் சேர்த்தார் டெஸ். அதன்பின் டெஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்நபருக்கு காபி வாங்கி கொடுத்திருக்கிறார். ”என்னருகே வந்து பர்ஸை ஒப்படைத்துவிட்டு, ’இனிமேல் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்’ என கூறினார். பிறகு, நான் அவருக்கு காபி வாங்கி கொடுத்தேன். ஏனென்றால், அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார்”, என்கிறார் டெஸ்.

“அவர்களும் மனிதர்கள் தான் என புரிந்துகொண்டு நாம் நடந்துகொண்டால் அவர்கள் நம்மிடத்தில் தன்மையுடன் நடந்துகொள்வர்.”, எனக்கூறும் டெஸ், அவர் மீது எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close