ஷவர்மா வாங்கித் தராததால் ஆத்திரம்: கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பெண்

இதனால், ஆத்திரமடைந்த அப்பெண் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று உடனடியாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

கணவன் – மனைவிக்குள் சண்டை வருவது இயல்புதான். அதற்கான காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். கருத்து வேறுபாடுகள், ரசனை, குண வேறுபாடுகள் ஆகியவற்றால் தான் தம்பதிகளுக்குள் பெரும்பாலும் சண்டை ஏற்படும். சண்டைகள் நீண்டுகொண்டே போனால், இறுதியில் விவாகரத்து வரையும்கூட பல தம்பதிகள் சென்றுவிடுவர்.

அப்படித்தான், எகிப்தை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஷவர்மா வாங்கித் தரவில்லை எனக்கூறி, திருமணமான 40 நாட்களிலேயே கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதில், அந்த தம்பதியர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள்தான் ஆகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 2 மாதங்கள் முன்புதான் அவரை எனக்கு தெரியும். அப்போது, அவர் இவ்வளவு கஞ்சமாக இருப்பார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை”, என கூறுகிறார் அந்த பெண். “பணம் விரயமாகும் என்பதால் தனக்கு வெளியே எங்கும் செல்வது பிடிக்காது என அவர் திருமணமான முதல் வாரத்தில் என்னிடம் தெரிவித்தார்.”.

அதனால், திருமணமாகி 40 நாட்களாகியும் சமீபத்தில்தான் இருவரும் வெளியிடத்துக்கு சென்றிருக்கின்றனர். அப்போது, அப்பெண் கணவரிடம் ஷவர்மா வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு, அப்பெண்ணின் கணவர் மறுத்திருக்கிறார். மேலும், ஜூஸ் மட்டும் வாங்கிக்கொடுத்ததாகவும், வேறு எதையும் வாங்கிக்கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அப்பெண்ணின் சொத்துகளையும் அவர் அபகரித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்ற அப்பெண் உடனடியாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த வழக்கின் விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில வாரங்களில் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close