வைரலாகும் வீடியோ: டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணிற்கு ஆபரேஷன் செய்யும் மருத்துவர்கள்

அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்கள் தொடர் கதையாக நீண்டுக் கொண்டே செல்கின்றன.

பீகாரில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிசத்தில் பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யும் காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

இந்திய நாட்டில் ஆம்புலன்ஸ் வராததால் ரோட்டில் குழந்தை பெற்ற கர்ப்பிணி, நீக்கப்பட்ட காலையே பாதிக்கப்பட்டவருக்கு தலையணையாக வைத்த நர்ஸ், போதிய மின்சார வசதி இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்யப்படும் நோயாளிகள் என அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்கள் தொடர் கதையாக நீண்டுக் கொண்டே செல்கின்றன.

இதை மீண்டும் நிரூப்பிக்கும் வகையில், பீகார், சர்தார் மருத்துவமனையில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. சஹார்சா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில், இன்று சாலை விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அந்த பெண்ணுக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்யும் சமயத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியில்லாத காரணத்தால் டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் வலது கையில், மருத்துவர்கள் நேர்த்தியாக ஆபரேஷன் செய்து முடித்துள்ளனர்.

பீகாரில் தற்போது, நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பொதுமக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத அவலத்திற்கு உதாரணமாக அரங்கேறியுள்ள இந்த சம்பவம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும், டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்யும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

×Close
×Close