தானேவில் 13-வது மாடி பால்கனியில் இருந்து 2 வயது குழந்தை விழுவதைப் பார்த்த இளைஞர், ஓடிச் சென்று குழந்தையைக் கைகளில் பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ரியல் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள டோம்பிவ்லியில் உள்ள ஒரு உயரமான கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து 2 வயது குழந்தை விழுவதை, கீழே அந்த வழியாக சென்ற ஒரு இளைஞர் பார்த்ததும் வேகமாக ஓடி சென்று கைகளில் குழந்தையைத் தாங்கிப் பிடித்தார். இதனால், குழந்தை சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த சம்பவம் பலரையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது. 13-வது மாடியில் இருந்து குழந்தை விழும்போது, பார்த்த ஒரு இளைஞர் வேகமாக ஓடிச் சென்று கைகளில் பிடித்தது அங்கே இருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர் வேகமாக ஓடிச் சென்று குழந்தையைப் பிடிக்கும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை ‘ரியல் ஹீரோ’ என்று பாராட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் கடந்த வாரம், டோம்பிவ்லியில் தேவிச்சபடா பகுதியில் நடந்துள்ளது. இளைஞர் ஓடிச் சென்று குழந்தையைப் பிடித்தாலும், அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்ததால், அவரால் முழுமையாகப் பிடிக்க முடியாததால், குழந்தைக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடியோவில், கீழே விழும் குழந்தையைப் பிடிக்க அந்த வழியே சென்ற பாவேஷ் மத்ரே வேகமாக ஓடுவதைப் பார்க்க முடிகிறது. அவரால் அந்த குழந்தையை முழுமையாகப் பிடிக்க முடியவில்லை என்றாலும், அவரது விரைவான நடவடிக்கை குழந்தை நேரடியாகத் தரையில் விழாமல் தடுத்தது. அந்த பெண் குழந்தை கீழே விழுந்தாலும் வேகம் குறைந்தது.
குழந்தை வழுக்கி விழுந்தபோது, 13-வது மாடியில் உள்ள அவரது பிளாட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். “குழந்தை விழுவதற்கு முன்பு சிறிது நேரம் பால்கனியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தாள்” என்று நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
அந்த தருணத்தை நினைவு கூர்ந்த பாவேஷ் மத்ரே, தான் கட்டிடத்தை கடந்து நடந்து சென்றபோது, அந்த ஆபத்தான சூழ்நிலையைக் கவனித்ததாகக் கூறினார். தயங்காமல், குழந்தையைக் காப்பாற்ற உறுதியுடன் உதவ விரைந்தார். “தைரியம் மற்றும் மனிதாபிமானத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை” என்று அவரது தன்னலமற்ற செயலை நினைவு கூர்ந்தார்.
ஒரு குடிமை அதிகாரி மத்ரேவின் துணிச்சலைப் பாராட்டினார், அவரது துணிச்சலான முயற்சிகளுக்காக அவரைப் பொதுவில் கௌரவிக்கத் திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறினார்.
இந்த சம்பவம், உயரமான கட்டிடங்களில், குறிப்பாக இளம் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, பால்கனி பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த உரையாடல்களைத் தூண்டியுள்ளது. குழந்தையின் உயிர் பிழைப்பு ஒரு அதிசயம் என்றாலும், நடக்க இருந்த சோகத்தை நம்பிக்கை மற்றும் வீரத்தின் கதையாக மாற்றிய பாவேஷ் மத்ரேவின் விரைவான சிந்தனை மற்றும் மனிதாபிமானத்திற்காக மக்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.